சென்னை: தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்தவர் சரவணன் (30). இவர், படப்பை அடுத்துள்ள டயர் தயாரிக்கும் தொழிற்சாலையில் பணிபுரிந்து வந்தார். இவருக்கும் ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த காயத்ரி (23) என்பவருக்கும் நான்கு மாதங்களுக்கு முன்பு திருமணம் நடந்தது.
காயத்ரி செம்மஞ்சேரியில் உள்ள தனியார் ஐடி நிறுவனத்தில் ஐடி ஊழியராகப் பணி செய்து வந்தார். இவர்களுக்குத் திருமணமாகி மூன்று மாதங்களாக பெருங்களத்தூர் புத்தர் தெருவில் உள்ள அடுக்குமாடிக் குடியிருப்பில் வாடகைக்கு வீடு எடுத்து வசித்து வந்தனர்.
திருமணமான நான்கு மாதத்திற்குள் தம்பதிக்கு இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. இந்நிலையில், நேற்று பணிக்குச் சென்ற சரவணன் இன்று அதிகாலை 3 மணி அளவில் வீட்டிற்கு வந்துள்ளார். அப்போது வீட்டில் உள்ள படுக்கை அறையில் மனைவி காயத்ரி தற்கொலை செய்து கொண்டிருந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்தார்.
அவரது அலறல் சத்தம் கேட்ட அக்கம்பக்கத்தினர் சரவணன் வீட்டிற்குச் சென்றிருக்கின்றனர். அப்போது, கணவன் மனைவி இருவருமே தற்கொலை செய்துகொண்ட நிலையிலிருந்துள்ளனர். இது குறித்துக் குடியிருப்பு வாசிகள் பீர்க்கங்கரணை காவல் துறையினருக்குத் தகவல் தெரிவித்தனர்.
பின்னர், சம்பவ இடத்திற்குச் சென்ற காவல் துறையினர், சடலங்களை மீட்டு உடற்கூராய்வுக்காக குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதையும் படிங்க: குமரியில் மின்சாரம் தாக்கி கர்ப்பிணி உள்பட மூவர் உயிரிழப்பு.. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல்!