தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் தாலுகா குளத்தூர் அருகே உள்ள தந்தை பெரியார் நகரில் வசித்து வந்தவர் சோலைராஜா(23), இவர் சூரங்குடி அருகேயுள்ள கல்லாங்குளம் கிராமத்தைச் சேர்ந்த பேச்சியம்மாள் என்ற ஜோதியை(20) கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பு இருதரப்பு பெற்றோர்களின் எதிர்ப்பையும் மீறி காதல் திருமணம் செய்துள்ளார்.
இருவரும் பட்டியலினத்தை சேர்ந்தவராக இருந்தாலும் வெவ்வேறு பிரிவைச் சேர்ந்தவர்களாக இருந்ததால் பெற்றோர் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். ஆகவே இருவரும் அதே பகுதியில் தனியாக வீடு வாடகைக்கு எடுத்து அதில் வசித்து வந்துள்ளனர். இந்நிலையில் இன்று அதிகாலை கத்தி அறுவாளுடன், காரில் வந்த மர்ம கும்பல் ஒன்று அவர்களை சரமாரியாக வெட்டி படுகொலை செய்து விட்டு தப்பியோடியுள்ளது.
தகவல் அறிந்து வந்த விளாத்திகுளம் காவல் கண்காணிப்பாளர் ஜெபராஜ், குளத்தூர் இன்ஸ்பெக்டர் ராமலெட்சுமி, சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். பின்னர் கொலை செய்யப்பட்ட இருவரது உடல்களும் பிரேத பரிசோதனைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவமனை்ககு அனுப்பி வைக்கப்பட்டது. சம்பவ இடத்தை தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அருண் பாலகோபாலன் பார்வையிட்டார்.
இளம் தம்பதியினர் காதல் திருமணம் செய்த நிலையில், சில மாதங்களுக்கு முன்பு தங்கள் உயிருக்கு ஆபத்து இருப்பதாக மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுத்துள்ளதாக உறவினர்கள் தெரிவித்தனர். ஆனால் அந்த மனு மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றும் சோலை ராஜாவின் உறவினர்கள் தரப்பில் குற்றஞ்சாட்டியுள்ளனர்.
ஜோதியின் தந்தை அழகிரி தரப்பு ஆட்கள் இந்த படுகொலையை செய்ததாகவும் , அவர்களை உடனடியாக கைது செய்ய வேண்டும் என வலியுறுத்தி மறியலில் ஈடுபடப் போவதாக வந்த தகவலையடுத்து தூத்துக்குடி அரசு மருத்துவமனை வளாகத்தில் போலீசார் குவிக்கப்பட்டனர். கொலை தொடர்பாக குளத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து பல்லாகுளத்தினை சேர்ந்த ஜோதி உறவினர்கள் 3 பேரை பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.