தூத்துக்குடி மீன்பிடி துறைமுகத்தைத் தங்கு தளமாகக் கொண்டு 240க்கும் மேற்பட்டோர் மீன்பிடித் தொழில் செய்து வருகின்றனர்.
கரோனா ஊரடங்கு, மீன் வரத்துக் குறைவு, டீசல் விலை உயர்வு மற்றும் மீன்பிடித் தடைக்காலம் உள்ளிட்ட காரணங்களால் கடந்த 70 நாட்களுக்கும் மேலாக தூத்துக்குடி துறைமுகத்திலிருந்து எந்த ஒரு விசைப்படகுகளும் மீன்பிடிக்கச் செல்லவில்லை. இந்நிலையில் வருகிற ஜுன் 15ஆம் தேதி மீன்பிடித் தடைக் காலம் முடிகிறது.
விசைப்படகு உரிமையாளர்கள் சங்கம் இது குறித்து விசைப்படகு மீனவர்கள் உரிமையாளர் சங்கப் பொறுப்பாளர் ஜான்போஸ்கோ செய்தியாளரிடம் தெரிவிக்கையில், 'கரோனா வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்றி மீன்பிடித் தடை காலத்தில் விசைப்படகுகள் எதுவும் கடலுக்கு மீன்பிடிக்கச் செல்லவில்லை.
இந்நிலையில் வருகிற 15ஆம் தேதி முதல் கடலுக்குச் செல்வதற்கான ஆயத்தப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. கடலுக்குச் செல்லும் மீனவர்கள் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் குறித்து அரசு அலுவலர்கள்-மீனவர்கள் இடையேயான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
கூட்டத்தில் அரசு அலுவலர்கள் கூறிய வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்றி மீனவர்கள் மீன்பிடித் தொழில் செய்வதற்குச் சம்மதம் தெரிவித்துள்ளோம். கடந்த ஆண்டு கரோனா வழிகாட்டு நெறிமுறைகளின்படி சுழற்சி அடிப்படையில் விசைப்படகுகள் கடலுக்குச் சென்று வந்தன.
அந்த முறையே தற்பொழுதும் பின்பற்றப்படும். மீனவர்களுக்கு 1,500லிட்டர் டீசல் மட்டுமே மானியமாக வழங்கப்படுகிறது. இதை 5,000 லிட்டராக உயர்த்தி வழங்கினால் மீனவர்களின் நலன் காக்க முடியும்.
கண்ணுக்குத் தெரியாத கரோனா வைரஸ் மக்களை அச்சுறுத்தி வருவது போலக் கண்ணுக்குத் தெரிந்த வைரஸ் ஒன்று மீனவர்களின் வாழ்வாதாரத்தைப் பாதித்து வருகிறது. உயர்ந்து வரும் பெட்ரோல், டீசல் விலை உயர்வு மீனவர்களின் வாழ்வினை அடியோடு பாதிக்கிறது.