தூத்துக்குடி: நதி நீர் இணைப்பு திட்டத்தை செயல்படுத்த தேர்ந்தெடுக்கப்பட்ட வறட்சி பகுதிகளான சாத்தான்குளம், திசையன் விளை மற்றும் திருநெல்வேலி மாவட்டத்தின் ராதாபுரம் ஆகியவற்றுக்குப் பாசனம், குடிநீர் வசதியை ஏற்படுத்தும் வகையில் தாமிரபரணி, கருமேனியாறு மற்றும் நம்பியாறு இணைப்புத் திட்டங்கள் மேற்கொள்ளப்படு வருகின்றன.
இத்திட்டத்திற்காக நில எடுப்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன. இத்திட்டம் மழைக்காலங்களில் கன்னடியன் பகுதியிலிருந்து வெள்ள நீர் தாமிரபரணியில் கலந்து கடலில் வீணாவதைத் தடுக்க பயன்படுகிறது. இத்திட்டத்தின் மூலம் 75 கி.மீ. தூரத்திற்கு நீர்வரத்து கால்வாய்கள் கொண்டு வரப்படுகின்றன. இதில் 67 கி.மீ. திருநெல்வேலி மாவட்டத்திலும், 8 கி.மீ. அளவில் தூத்துக்குடி மாவட்டத்திலும் கால்வாய் இருக்கிறது. தூத்துக்குடி மாவட்டத்தைப் பொறுத்தவரை சாத்தான்குளம் அருகே உள்ள அரசூர், நடுவக்குறிச்சி ஆகிய கிராமங்களில் நில எடுப்புப் பணிகள் நடைபெறுகிறது. இங்கு நடைபெறும் இந்தப் பணிகளுக்காக 50 மீட்டர் அகலத்தில் இந்த கால்வாய்கள் தோண்டப்பட்டு வருகிறது.
இதனிடையே தாமிரபரணி ஆற்றில் வெள்ளம் அதிகமாக வரும்போது 3,500 கன அடி தண்ணீர் அங்கிருந்து எடுக்கப்படும். மேலும், கருமேனியாறு நம்பியாற்றினை இணைத்து கடைசியாக இருக்கின்ற கிராமங்களுக்கு 500 கன அடி தண்ணீர் வரும் வகையில் இத்திட்டம் செயல்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டது.
மேலும், தூத்துக்குடி மாவட்டத்தில் அமைக்கப்படும் 8 கி.மீ. கால்வாய் பணிகளுக்கு 6.7 கி.மீ. தூரத்திற்கு நில எடுப்பு செய்யப்பட்டு கால்வாய் அமைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் மீதமுள்ள 1.3 கி.மீ. தூரத்திற்கு நடுவக்குறிச்சி கிராமத்தில் நில எடுப்புப் பணிகள் மேற்கொள்ள 11 பட்டாதாரர்கள் எதிர்ப்புத் தெரிவித்துள்ள நிலையில் நீர்வரத்து கால்வாய்கள் அமைக்கும் பணிகள் நடைபெறாமல் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் அந்தப் பகுதிகளில் நடைபெறும் பணிகளை பார்வையிடுவதற்காக தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் அந்த இடத்திற்கு நேரில் வருகை புரிந்தார். பணிகள் எவ்வாறு நடைபெறுகின்றன என்பதை சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் கேட்டறிந்தார். மேலும், நடுவக்குறிச்சி கிராமப் பட்டாதாரர்களிடம் கால்வாய் அமைப்பது தொடர்பான பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார். இதுகுறித்து நில நிர்வாக ஆணையர் மற்றும் பொதுப்பணித்துறை செயலர் ஆகியோரிடம் அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டு தொடர்ந்து நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என மாவட்ட ஆட்சித்தலைவர் தெரிவித்தார்.
அப்போது கால்வாய் அமைப்பது தொடர்பான பணிகள் குறித்து மாவட்ட ஆட்சியர் கேட்ட கோப்புகளை அங்கிருந்த அதிகாரிகள் சரியாக கொண்டு வராமல் இருந்தனர். மேலும், அங்கு நில அளவீடு செய்யும் பணிகள் குறித்து அதிகாரிகளுக்கு சரிவர தெரியவில்லை. இதனால் மாவட்ட ஆட்சியர் அந்த அதிகாரிகளை வெளுத்து வாங்கினார். மேலும் மாவட்ட ஆட்சியர் செம்மண் தேரியில் சுமார் 4 கிலோ மீட்டர் நடந்தே சென்று ஆய்வு செய்தார்.
இதையும் படிங்க:செந்தில் பாலாஜியின் நீக்கம் ரத்து - ஆளுநரின் உத்தரவை ரத்து செய்ய மனு