கொடியன்குளம் கலவரத்தை மட்டுமே தொடர்புபடுத்தி கர்ணன் திரைப்படம் உருவாகவில்லை. 1990களில் தென் தமிழ்நாடு அளவில் தலித் மக்களுக்கு ஏற்பட்ட வாழ்வியல் பிரச்னைகள், தீண்டாமை உள்பட பல்வேறு இடங்களில் நடைபெற்ற சம்பவங்களின் கோர்வையாக கர்ணன் திரைப்படம் உருவாகியுள்ளது. 1990-களில் தூத்துக்குடி மாவட்டம் செய்துங்கநல்லூர், புளியம்பட்டி பகுதியில் வாழ்ந்த மக்களுக்கு நிலவிய பேருந்து நிறுத்த பிரச்னையை மையப்படுத்தி கர்ணன் திரைப்படம் முதல் பாதி அமைக்கப்பட்டுள்ளது.
திரைப்படத்தில் காட்டப்படும் கன்னி வழிபாடு முறை இப்போதும் தலித் மக்களால் பின்பற்றப்படுகிறது. நடிகர் தனுஷின் அறிமுக காட்சியில் "மீனை வெட்டி ஊர் வாளை பெறும் நடைமுறை" தலித் மக்கள் உட்பிரிவுகளில் குறிப்பிட்ட ஒரு சாதி பிரிவினர் மட்டுமே பின்பற்றும் நடைமுறை(கொடியன்குளம் கிராமத்தினரால் பின்பற்றபடுபவை அல்ல).
கர்ணன் திரைப்பட கதாபாத்திரங்கள் மகாபாரத கதாபாத்திர பெயர்களை தாங்கி நிற்கும். இவ்வாறாக பெயர் கொண்ட கிராமத்தினர் தூத்துக்குடி மாவட்டம் ஆதிச்சநல்லூர் அருகே உள்ள புளியங்குளம் பகுதியில் வாழ்ந்த தலித் மக்கள் என கூறப்படுகிறது. அப்பகுதியில் உள்ள பாண்டி கோயில், மகாபாரத கதையுடன் தொடர்புடையதாக சொல்லப்படுகிறது.
ஒவ்வொரு ஆண்டும் கோயில் திருவிழாவின்போது பொதுமக்கள் இரு பிரிவினராக பிரிந்து மகாபாரத கதை நடப்பது போன்றே கோயில் திருவிழா நடத்தப்படுகிறது. எனவே கோயிலை சுற்றியுள்ள கிராமத்தினருக்கு மகாபாரத கதாபாத்திர பெயர்களை சொல்லியே அழைத்து வந்துள்ளனர்.
ஊரை காவல் செய்வதற்காக ஊரை சுற்றிலும் முள் வேலி அமைக்கப்படுவதாக காட்சிப்படுத்தப்பட்டிருக்கும் சம்பவம் உண்மையில் கொடியன்குளம் கிராமத்தில் நடந்தது. சாதிய மோதல் உச்சக்கட்டம் அடைந்தபோது நெல்லை, தூத்துக்குடி, தென்காசி மாவட்டங்களில் பல இடங்களிலும் போக்குவரத்து துண்டிக்கப்பட்டது. எந்நேரத்திலும் பிற சாதியினரால் ஊர் மக்களுக்கு பாதிப்பு ஏற்படலாம் என கருதிய கொடியன்குளம் கிராமத்தினர் ஊரையும் ஊர் மக்களையும் பாதுகாப்பதற்காக ஊரை சுற்றிலும் கருவேல முள் மரங்களை ஆறடி உயரத்திற்கு வெட்டி சுற்றுவேலி அமைத்திருந்தனர்.
திரைப்படத்தில் காவல் துறையினர் ஊருக்குள் வந்த பேருந்தை அடித்து நொறுக்கியவர்களை விசாரிக்க அழைக்கும்போது மேல்நிலை நீர்தேக்க தொட்டியின் மீது நடிகர் தனுஷ் மற்றும் அவரது கூட்டாளிகள் பதுங்கி இருப்பது போன்று காட்சி அமைக்கப்பட்டிருக்கும். ஆனால் உண்மையில் கொடியன்குளம் கிராமத்தில் மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியின் மீது இளைஞர்கள் மற்ற ஊர்களை வேவு பார்ப்பதற்காக பதுங்கி இருந்துள்ளனர். ஊரிலுள்ள காரை வீடுகளின் மொட்டை மாடிகளிலும், மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியிலும் சுழற்சி அடிப்படையில் ஒவ்வொரு ஊரைச் சேர்ந்த இளைஞர்கள் வேவு பார்த்துள்ளனர்.
கலவரத்தில் காவல் துறையினர் தலித் மக்களின் சான்றிதழ்களை கிழித்தெறிவதுபோல படத்தில் காட்டப்பட்டிருக்கும் காட்சியும் உண்மையில் கொடியன்குளம் சம்பவத்தை ஒத்ததுதான். கொடியன்குளம் கலவரத்தின்போது காவல் துறையினரால், படித்த இளைஞர்கள் இளம் பெண்களின் சான்றிதழ்கள் தீயிட்டுக் கொளுத்தப்பட்டதாக பொதுமக்கள் குற்றஞ்சாட்டுகின்றனர்.
அதேபோல், மக்களின் வாழ்வியலோடு கலந்த மிருகமாக நாய் திரைப்படத்தில் இடம்பெற்றிருக்கும். நிஜத்தில் கொடியன்குளம் கிராமத்தில் ஊரை காப்பதற்காக ராஜபாளையம் வகையை சேர்ந்த வேட்டை நாய்கள் வளர்க்கப்பட்டுள்ளன. கலவரத்தில் போலீசாரால் துப்பாக்கி கொண்டு தாக்கப்பட்டதில் நாயின் ஒருபகுதி கண் பார்வையிழந்ததுடன், அடிப்பட்ட பகுதி புண்ணாகி சீழ் வடிந்து சில மாதங்களிலேயே ஒரு நாயும் இறந்துபோனது குறிப்பிடத்தக்கது.
இந்த விவகாரம் குறித்து கொடியன்குளததின் தற்போதைய ஊராட்சி தலைவர் அருண் பேசுகையில், “கொடியன்குளம் கலவரம் திட்டமிட்டே நடத்தப்பட்ட ஒன்று. திரைப்படத்தில் காண்பித்தபடி உண்மையில், கலவரத்தின்போது 15 பேரின் படிப்பு சான்றிதழை காவல் துறையினர் கிழித்து எறிந்தனர். இந்த விவகாரத்தில் எங்களுக்கு நியாயம் கிடைக்க வேண்டும்” என்று பல்வேறு விஷயங்களை பேசுகிறார் கலவரத்தை நேரில் பார்த்த அதிர்ச்சியோடு.
அதேபோல், மற்றொரு கொடியன்குளம்வாசி பேசுகையில், “கொடியன்குளம் கலவரம் குறித்து திரைப்படம் மூலம் பேசியதற்கு இயக்குநர் மாரி செல்வராஜுக்கு நன்றி. நடந்த சம்பவங்கள் நிறைய. காட்டியிருக்கும் சம்பவங்கள் குறைவுதான். பொருளதார ரீதியாக எங்களை முடக்குவதற்காகவே கலவரம் நடத்தப்பட்டது. தண்ணீர் டாங்க்கில் இளைஞர்கள் பதுங்கியிருப்பது போன்று திரைப்படத்தில் காட்டியிருக்கும் காட்சியைப் போலவே கொடியன்குளத்தில் உண்மையில் நடந்தது. ஆளுங்கட்சி ஆதரவுடந்தான் கலவரம் நடந்து” என்று பேசிமுடித்தார்.