அனைத்து இடங்களுக்கும் அவர்கள் வருகிறார்கள். அவர்களை சிலர் கேலியும் கிண்டலும் செய்வார்கள், பதிலுக்கு அவர்களின் பதில் நம்மை அசரவைக்கும். அவர்கள் என்பவர்கள் யார்? நம் சமகால மனிதர்கள் தான் அவர்கள். மனிதம் நிறைந்த மாமனிதர்கள். அவர்கள் தான் திருநங்கைகள். அவர்களிடம் ஒரு அதிசயம் இருக்கிறது.
தனக்கென ஓர் அடையாளம், ஓர் அங்கீகாரம் உரிமை இல்லாமல், எந்த ஒரு மனித உயிரும் இந்தப் பூமியில் தன்மதிப்புடன் வாழ முடியாது. ஆனால், இப்படி எந்தவித உரிமையும் இன்றி மாற்று பாலினத்தவர்களாய் வாழும் திருநங்கைகள் நம்முடன் வாழ்ந்து வருகின்றனர். மண்ணைக் கீறி வெளிவரும் விதையைப் போல, வலிகளைக் கீறி எழுந்து பல வெற்றி வாகைகளை திருநங்கைகள் சூடி வருகின்றனர்.
அந்த வகையில், கோவில்பட்டியில் வசித்து வரும் திருநங்கைகள் அரசின் உதவியோடு சுயமாக தொழில் செய்துவரும் நிகழ்வு பெரும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டியில் 30 திருநங்கைகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தவும், சமுதாயத்தில் உயர்ந்த இடத்தை அடையும் வகையிலும் மந்தித்தோப்பு பகுதியில் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரியின் முயற்சியில் அவர்களுக்குப் பசுமை வீடுகள், பால் பண்ணை ஆகியவை அமைத்து கொடுக்கப்பட்டுள்ளது.
30 பசுமை வீடுகள்:
கோவில்பட்டி அருகே மந்தித்தோப்பில், சுமார் இரண்டு ஏக்கர் நிலம் ஒதுக்கப்பட்டு, சூரிய ஒளி மின்சக்தியுடன் கூடிய பசுமை வீடுகள் கட்டப்பட்டுள்ளது. மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் 34.50 லட்சம் ரூபாய் செலவில் பால் பண்ணையுடன் கூடிய மாட்டுத் தொழுவம், கூட்டுறவுத்துறையின் மூலம் 40 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள பசுமாடுகள் வாங்கப்பட்டு, அதற்கென தனியாக கூட்டுறவு சங்கம் ஏற்படுத்தப்பட்டுள்ளது.
பால் பண்ணை:
'எங்களுக்கு வழங்கப்பட்டிருக்கும் பசுமாடுகளைக் கொண்டு தினசரி காலை, மாலை இரு வேளைகளிலும் பால் கறந்து, அதனை கோவில்பட்டி கூட்டுறவு பால் சங்கம் மூலமாக விநியோகம் செய்து வருகிறோம். இதில் கிடைக்கும் வருமானத்தை கொண்டு எங்களது வாழ்க்கைப் பயணத்தை நடத்தி வருகிறோம். சுய தொழில் புரிவதன் மூலமாக சராசரி ஆண், பெண்களைப் போன்று நாங்களும் சமூகத்தில் மதிக்கப்படத் தொடங்கியுள்ளோம். சமூகத்தில் எங்கள் மீதிருந்த தவறான எண்ணங்கள் மறைந்து படிப்படியாக நல்லெண்ணங்கள் விதைக்கப்பட்டு வருவது மகிழ்ச்சியளிக்கிறது.
சுயமரியாதையோடு வாழ்கிறோம்:
இதுபோன்று பிற ஊர்களில் உள்ள திருநங்கைகளுக்கும் சுயதொழில் வாய்ப்புகளை ஏற்படுத்திக் கொடுத்து, அவர்களை தொழில் முனைவோர்களாக உருவாக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இங்குள்ள திருநங்கைகள் சுய தொழில் புரிந்து வருமானம் ஈட்டுவதன் மூலம் சுயமரியாதையோடு வெளியிடங்களுக்குச் செல்ல முடிகிறது. சமூகத்தில் இதற்கு முன்னர் எங்களுக்கு இழைக்கப்பட்ட கேலி, கிண்டல்கள், பாலியல் சீண்டல்கள், தற்பொழுது குறையத் தொடங்கியுள்ளது. இதற்கு காரணமாக அமைந்ததுடன் வாழ்க்கை வாழ்வாதார மேம்பாட்டிற்கு உதவிய மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி மற்றும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆகியோருக்கு எங்களது நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்' என்றனர், அங்கிருந்த பயனடைந்த திருநங்கைகள்.
திருநங்கைகளின் 'சந்தீப் நகர்'
வாழ்க்கைத் தரத்தை உயர்த்த போராடும் திருநங்கைகளின் வாழ்விற்கு வெளிச்சம் பாய்ச்சி சிறப்பான திட்டங்களை செயல்படுத்தி வரும் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி, அவர்களது வாழ்வில் ஒரு ஒளி விளக்காகத் திகழ்கிறார்.
இதற்கு நன்றி தெரிவிக்கும் விதமாக திருநங்கைகள் வசிக்கும் இடத்திற்கு 'சந்தீப் நகர்' என்று மாவட்ட ஆட்சியரின் பெயரை சூட்டியுள்ளனர்.
இதையும் படிங்க: சென்னையில் கனமழை; பொதுமக்கள் எச்சரிக்கையுடன் இருக்க ஆணையர் வலியுறுத்தல்!