தூத்துக்குடி மாவட்டம் தட்டார்மடம் அருகே உள்ள சொக்கன்குடியிருப்பைச் சேர்ந்தவர் செல்வன் (32). வாட்டர் கேன் வியாபாரியான இவர், கடந்த மாதம் 17ஆம் தேதி தட்டார்மடம் காட்டுப்பகுதியில் கொலைசெய்யப்பட்டுக் கிடந்தார்.
அவரை, அதிமுக பிரமுகர் திருமணவேல், அவரது சகோதரர் முத்துகிருஷ்ணன், சின்னதுரை, முத்துராமலிங்கம் ஆகியோர் காரில் கடத்திச்சென்று கொலைசெய்திருப்பதும், இதற்கு உடந்தையாக தட்டார்மடம் காவல் ஆய்வாளர் ஹரிகிருஷ்ணன் செயல்பட்டதும் தெரியவந்தது.
இதையடுத்து ஆய்வாளர் ஹரிகிருஷ்ணன் உள்ளிட்ட ஆறு பேர் மீது நெல்லை மாவட்டம் திசையன்விளை காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்தனர்.
சின்னதுரை, முத்துராமலிங்கம் ஆகியோர் கைது செய்யப்பட்டு ஸ்ரீவைகுண்டம் சிறையில் அடைக்கப்பட்டனர். பின்னர் இந்த வழக்கு சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றப்பட்டது. சிபிசிஐடி காவல் துறையினர் தட்டார்மடம், சொக்கன்குடியிருப்பு, திசையன்விளை பகுதிகளில் முகாமிட்டு விசாரணை நடத்தினர்.
ஆய்வாளர் ஹரிகிருஷ்ணன் பணியிடை நீக்கம்செய்யப்பட்டார். இதற்கிடையில் செல்வன் கொலை வழக்கில் தேடப்பட்டுவந்த திருமணவேல், அவரது சகோதரர் முத்துகிருஷ்ணன் ஆகியோர் சென்னை சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் சரண் அடைந்தனர்.
பின்னர் அவர்கள் கோவில்பட்டி நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டு பேரூரணி சிறையில் அடைக்கப்பட்டனர். இந்நிலையில் சிறையில் உள்ள திருமணவேல், முத்துகிருஷ்ணன், சின்னதுரை, முத்துராமலிங்கம் ஆகியோரை சிபிசிஐடி காவல் துணைக் கண்காணிப்பாளர் அனில்குமார் தலைமையிலான காவல் துறையினர் காவலில் எடுக்க கடந்த 30ஆம் தேதி கோவில்பட்டி நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தினர்.
அவர்களை ஆறு நாள்கள் காவலில் எடுத்து சிபிசிஐடி காவல் துறையினர் விசாரிக்க நீதித்துறை நடுவர் பாரதிதாசன் அனுமதியளித்து உத்தரவிட்டார். அதன்படி அவர்கள், காவலில் எடுத்து விசாரிக்கப்பட்டனர்.
இதில் பல்வேறு திடுக்கிடும் தகவல்களை சிபிசிஐடி காவல் துறையினரிடம் அவர்கள் கூறியதாகத் தெரிகிறது. இந்நிலையில் காவல் முடிவடைந்ததைத் தொடர்ந்து திருமணவேல் உள்ளிட்ட நான்கு பேரும் கோவில்பட்டி நீதித்துறை நடுவர் பாரதிதாசன் முன்பு காவல் துறையின் பலத்த பாதுகாப்புடன் மீண்டும் நள்ளிரவில் முன்னிலைப்படுத்தப்பட்டனர். அவர்களைச் சிறையில் அடைக்க நடுவர் பாரதிதாசன் உத்தரவிட்டார்.