தூத்துக்குடி தாளமுத்து நகரைச் சேர்ந்தவர் அந்தோணி முத்து (வயது 62). கூலித் தொழிலாளி. இவருக்கு பக்கத்து வீட்டில் வசித்து வருபவர் நடராஜன். கடந்த சில வருடங்களுக்கு முன்பு, அந்தோணி முத்துவுக்குச் சொந்தமான இடத்தை விலைக்கு வாங்கிய நடராஜன் பொதுச் சுவருடன் கூடிய, வீட்டைக் கட்டி குடியேறினார்.
தொடர்ந்து நடராஜன், பொதுச் சுவர் கட்டியதற்காக, அந்தோணி முத்துவிடம் பங்கு பணம் கேட்டுள்ளார். ஆனால், அந்தோணி முத்து பணம் தர மறுத்ததாகத் தெரிகிறது. இதனால் அவர்களுக்குள் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது.
இந்த நிலையில் நேற்று இரவும் அந்தோணி முத்துவுக்கும் நடராஜனுக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து அந்தோணி முத்து வழக்கம் போல், தனது வீட்டு மாட்டுத் தொழுவத்தில் உறங்க சென்றார். அதிகாலை அந்தோணி முத்து தெருவாசலில் இரத்த வெள்ளத்தில் பிணமாக கிடப்பதைக் கண்டு, அவரது உறவினர்கள் கதறி அழுதனர்.
இதுகுறித்து, தகவலறிந்த தாளமுத்து நகர் காவல் துறையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று, அந்தோணி முத்துவின் உடலை மீட்டு தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
இதைத்தொடர்ந்து காவல் துறையினர் நடத்திய விசாரணையில், பொதுச் சுவருக்கு பங்குப் பணம் வாங்குவதில் ஏற்பட்ட தகராறில் ஆத்திரமடைந்த நடராஜன், அதிகாலை நேரத்தில் மாட்டுத் தொழுவத்தில் உறங்கிக் கொண்டிருந்த, அந்தோணி முத்துவை அரிவாளால் வெட்டி, படுகொலை செய்துவிட்டு அங்கிருந்து தப்பியோடியது விசாரணையில் தெரியவந்தது. மேலும், தாளமுத்து நகர் காவல் துறையினர், இதுகுறித்து வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதையும் படிங்க:
திமுக எம்எல்ஏ பூண்டி கலைவாணன் உட்பட 5 பேருக்கு விடுதலை - திருவாரூர் நீதிமன்றம் உத்தரவு!