முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் இரண்டாவது படை வீடும், கடற்கரை ஓரத் தலமுமான திருச்செந்தூரில் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் அமைந்துள்ளது. இது தமிழ்நாட்டின் மிக முக்கியமான கோயிலாகவும் பரிகாரத் தலமாகவும் திகழ்கிறது.
இக்கோயிலில், ரூ.250 கட்டணத்தில் சிறப்பு விரைவு தரிசனம், ரூ.100 கட்டணத்தில் விரைவு தரிசனம், சிறப்புக் கட்டண தரிசனம், பொது தரிசனம் என நான்கு வரிசை முறைகளில் பக்தர்கள் தரிசனத்திற்காகச் செல்கின்றனர்.
![முருகப்பெருமானின் இரண்டாவது படை வீடு](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/tn-tut-01-murugan-kovil-tcn-news-script-photo-7204870_07022020114958_0702f_1581056398_589.jpg)
இதில், விழாக்காலங்கள், விசேஷ காலங்கள் மட்டுமின்றி விடுமுறை நாள்களிலும் பக்தர்கள் கூட்டம் அலைமோதுகிறது. இந்நிலையில், ரூ.250 கட்டண தரிசன வரிசையும் ரூ.100 கட்டண தரிசன வரிசையும் மகா மண்டபத்தில் நுழையும்போது ஒரே வரிசையாகிவிடுகிறது. இதனால், ரூ.250 கட்டண தரிசன வரிசையில் செல்லும் பக்தர்கள் மனக்குமுறல் அடைந்தனர்.
இதனால், பக்தர்களின் அதிருப்தியைப் போக்கும் வகையில், ரூ.250 கட்டண தரிசனத்தில் செல்லும் பக்தர்களுக்காக கொடிமரம் அருகில் பிரசாதமாக ஒரு லட்டு, இலை விபூதி வழங்கிட திருக்கோயில் நிர்வாகம் ஆலோசித்தது.
இதற்காக அறநிலையத்துறை ஆணையரின் அனுமதி கேட்கப்பட்டிருந்தது. தற்போது லட்டு, இலை விபூதி வழங்க அறநிலையத்துறை ஆணையர் பணீந்திர ரெட்டி அனுமதியளித்திருக்கிறார்.
மேலும், மதுரை மீனாட்சியம்மன் திருக்கோயிலில், கடந்த நவம்பர் 7ஆம் தேதி முதல் சுவாமி தரிசனம் செய்யும் அனைத்து பக்தர்களுக்கும் பிரசாதமாக இலவச லட்டு வழங்கப்பட்டு வருகின்றது.
![திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில்](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/tn-tut-01-murugan-kovil-tcn-news-script-photo-7204870_07022020114958_0702f_1581056398_1090.jpg)
அதுபோல அதிக வருமானம் உடைய இக்கோயிலிலும், தரிசனக் கட்டண வரிசையில் செல்லும் பக்தர்களுக்கு மட்டும் லட்டு, விபூதி பிரசாதம் வழங்கிடாமல், பாரபட்சமின்றி அனைத்து பக்தர்களுக்கும் வழங்கிட வேண்டும் என்பதே பக்தர்களின் கோரிக்கையாக உள்ளது.
இதையும் படிங்க: முருகனின் முதல்படைவீட்டில் முத்தாய்ப்பாக நடந்த தெப்பத் திருவிழா!