தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள கோவில்பட்டி பயணியர் விடுதி முன்பு, தமிழ்நாடு அரசு டாஸ்மாக் பணியாளர்கள் சங்கத்தினர் மாவட்டம் தழுவிய ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த ஆர்ப்பாட்டத்திற்கு தமிழ்நாடு அரசு டாஸ்மாக் பணியாளர் சங்கத்தின் மாநில துணைத்தலைவர் மரகதலிங்கம் தலைமையேற்று நடத்தினார்.
இந்த ஆர்ப்பாட்டத்தில், '17 ஆண்டுகளாகத் தொகுப்பு ஊதியத்தில் பணியாற்றி வரும், டாஸ்மாக் பணியாளர்களை பணி நிரந்தரம் செய்து, காலமுறை ஊதியமாக குறைந்த பட்சம் ரூ.21 ஆயிரம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். ஓய்வு பெறும் டாஸ்மாக் பணியாளர்களுக்கு பணிக்கொடை குறைந்தபட்சம் ரூ.10 லட்சமாக உயர்த்தி வழங்கப்பட வேண்டும். ஓய்வூதியம் குறைந்தபட்சமாக ரூ.10 ஆயிரம் வழங்க வேண்டும். மதுபானக்கடை, பார் ஆகியவை தனித்தனியாக அமைக்க வேண்டும். காலியாக இருக்கும் பணியிடங்களுக்கு ஏற்கெனவே நடத்திய தேர்வின் அடிப்படையில் பணியினை நிரப்ப வேண்டும்' என்பது உள்ளிட்ட 15 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு அரசு டாஸ்மாக் பணியாளர் சங்கத்தினர் முழக்கங்களை எழுப்பினர்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் மாவட்டத்திலுள்ள ஏராளமான டாஸ்மாக் ஊழியர்கள் கலந்து கொண்டு தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி, கண்டன முழக்கங்களை எழுப்பினர்.
இதையும் படிங்க:'குளு குளு கொடைக்கானலில் மதுபானங்களுக்கு கிடு கிடு விலை'