தூத்துக்குடி மாவட்டத்தில் அரசு சார்ந்த பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக தமிழ்நாடு செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜு இன்று காலை தூத்துக்குடி வந்தடைந்தார். இதனையடுத்து தூத்துக்குடியில் தற்காலிக பேருந்து நிலையத்தில், கோவில்பட்டி, சென்னை, மதுரை, வேளாங்கண்ணி, எர்ணாகுளம் உள்ளிட்ட வழித்தடங்களுக்கு இயங்கக் கூடிய புதிய பேருந்துகளை கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
இதன் பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்து பேசிய அவர், ‘திமுகவை பொறுத்தவரை, ஸ்டாலினாக இருந்தாலும், கனிமொழியாக இருந்தாலும் சரி அவர்களது லட்சியம் ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றுவதுதான். ஆட்சிக்கட்டிலில் அமரவேண்டும் என்ற கனவுடன் இருக்கிறார்களே தவிர மக்கள் பணியை செய்ய விரும்பவில்லை. அதிமுகவை குறை கூறுவதை தவிர்த்து திமுகவினர் மக்கள் பணியை செய்ய நேர்ந்தால் நல்லது’ என்று விமர்சித்து பேசினார்.
மேலும் பேசிய அவர், ‘டி.ராஜா இன்று நாடாளுமன்ற உறுப்பினராக இருக்கிறார் என்றால் அதற்கு அதிமுக தான் காரணம். இன்று திமுக, காங்கிரஸ் கூட்டணியில் இருந்துகொண்டு அவர்கள்தான் திமுகவுக்கு எடுபிடியாக செயல்படுகிறார்கள். அதிமுக யாருக்கும் என்றைக்கும் எடுபிடியாக செயல்பட வேண்டிய அவசியமில்லை. திமுகவுடன் கூட்டணியில் இருந்துகொண்டு திமுகவின் எடுபிடியாக செயல்படும் டி.ராஜா இத்தகைய விமர்சனங்களை தெரிவிப்பது அர்த்தமற்றது’ என்று தெரிவித்தார்.