வல்லநாடு அரசு ஆரம்பச் சுகாதார நிலையத்தில் 15 லட்சம் ரூபாய் மதிப்பில் கட்டப்பட்ட சித்த மருத்துவப் பிரிவிற்கான புதிய கட்டடத்தை அமைச்சர் கடம்பூர் ராஜு திறந்துவைத்தார். இதையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், “நமது மாவட்டத்தில் அதிகபட்சமாக இதுவரை 78,000 மாதிரிகள் சேகரிக்கப்பட்டுள்ளன. இதுவரை 8 ஆயிரம் பேருக்கு தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. மாவட்டத்தில் இறப்பு விகிதம் 0.6 விழுக்காடாக உள்ளது.
தமிழ்நாட்டிலேயே தூத்துக்குடி மாவட்டத்தில்தான் குறைவான இறப்பு விகிதம் உள்ளது. இதற்கு தகுந்த நடைமுறைகளைப் பின்பற்றி, துரிதமாக எடுக்கப்பட்ட நடவடிக்கைகளே காரணம். சென்னை மட்டும் அல்லாமல் பல்வேறு மாவட்டங்களிலும் முதலமைச்சர் நேரடியாகச் சென்று ஆய்வு செய்துள்ளார். நாளை மறுநாள் திருநெல்வேலி மாவட்டத்திற்கு அவர் வருகைதர உள்ளார்.
நமது மாவட்டத்தில் பல்வேறு வளர்ச்சி திட்டப் பணிகள் நடைபெற்றுவருகின்றன. கருங்குளத்தில் மகளிர் சுயஉதவிக் குழு கூட்டமைப்பு கட்டடம் 73.23 லட்சம் ரூபாய் மதிப்பில் கட்டுவதற்கு அடிக்கல் நாட்டப்படுகிறது. கரோனா பரவல் ஒருபுறம் இருந்தலும் நாள்தோறும் மக்களின் அன்றாட தேவைகளையும், வளர்ச்சிப் பணிகளையும் தடைபடாமல் பூர்த்தி செய்ய வேண்டும் என்று முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளாதால், அப்பணிகள் தொடர்ந்து நடைபெற்றுவருகின்றன” என்றார்.
இதையும் படிங்க: வ.உ.சி மார்க்கெட்டில் கடைகள் ஒதுக்குவதில் அரசியல்வாதிகளின் தலையீடு