புதுக்கோட்டை: கந்தர்வகோட்டை அருகே உள்ள மங்கனூர் கிராமத்தில் தமிழ்நாடு அரசு சார்பில் 127 கோடி ரூபாய் மதிப்பில் பல்நோக்கு கடற்பாசி பூங்கா அமைய உள்ளது. இந்த கடற்பாசி பூங்கா அமைய உள்ள இடத்தை மீன்வளத்துறை மற்றும் கால்நடை துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் ஆய்வு செய்தார்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை மற்றும் கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன், ”தமிழ்நாடு அரசு மீன்வளத்துறை சார்பில் கடல்பாசி வளர்க்கும் பூங்கா ஏற்கனவே ராமநாதபுரம் மாவட்டத்தில் செயல்படுத்தப்பட்டுள்ளது.
அங்கிருந்து வளர்க்கப்பட்ட கடல்பாசி புதுக்கோட்டை மாவட்டம், மங்கனூர் கிராமத்திற்கு கொண்டு வந்து, அங்கு மதிப்புக் கூட்டப்பட்ட பொருளாக மாற்றுவதற்கு பல்நோக்கு கடல்பாசி பூங்கா 127 கோடி ரூபாய் மதிப்பில் 17 ஏக்கர் பரப்பளவில் விரைவில் தொடங்கப்பட உள்ளது. அதற்காக ஆய்வு பணி இன்று நடைபெற்றுள்ளது. இதனால் இங்கு தொழில் வளர்ச்சி ஏற்படும்.
மீனவர்களுக்கு வாக்கி டாக்கி கருவிகள் ஏற்கனவே வழங்கப்பட்டுள்ளது. தற்போது சேட்டிலைட் மூலமாக கண்காணிப்பதற்கும், பேசுவதற்கும் கருவிகள் விசைப்படகுகளுக்கு வழங்கப்பட்டுள்ளது. தேவைப்படும் பட்சத்தில் கூடுதலாக மீனவர்களுக்கு வாக்கி டாக்கி சேட்டிலைட் ஃபோன் ஆகியவை வழங்கப்படும்.
ஏற்கனவே மீனவர்களுக்கு மழைக்கால நிவாரணமாக 5,000லிருந்து 8,000ஆக தமிழ்நாடு அரசு உயர்த்தி உள்ளது.
விரைவில் டீசல் மற்றும் மண்ணெண்ணை ஆகியவை கூடுதலாக வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும். கச்சத்தீவை மீட்க வேண்டும் என்பது தான் எங்களை எண்ணம், இது குறித்த வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. இந்த புகாரில் மத்திய அரசு தான் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இலங்கை கடற்படையால் சிறைபிடிக்கப்பட்ட படகுகளையும் மீனவர்களை மீட்கவும் மத்திய அரசு தான் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இருப்பினும் இலங்கை குழுவும், தமிழ்நாடு குழுவும் விரைவில் பேச்சுவார்த்தை நடத்தி மீனவர்கள் விடுதலை செய்வதாக படகுகளையும் விடுதலை செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்படும்.
தமிழ்நாட்டில் பால் உற்பத்தியைப் பெருக்க உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது, தூத்துக்குடி மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் கால்நடைகளை இழந்த விவசாயிகளுக்கு மாடுகள் உள்ளிட்ட கால்நடைகளை வழங்கவும் முதலமைச்சர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
தனியார் நிறுவனங்களில் இருந்து கடலில் கலக்கும் எண்ணெய் கழிவுகளை தடுப்பதற்கு சுற்றுச்சூழல் துறையோடு இணைந்து மீன்வளத்துறை நடவடிக்கை எடுத்து வருகிறது. அவ்வாறு ஏதாவது அசம்பாவிதம் ஏற்பட்டால் அது நவீன கருவி மூலமாக எண்ணெய் கழிவுகளை அகற்றுவதற்கு இனிவரும் காலங்களில் நடவடிக்கை எடுக்கப்படும்.
சென்னை எண்ணூர் பகுதிகளில் எண்ணெய் கழிவுகள் கலந்ததால் மீனவர்கள் பெருமளவு பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு கூடுதலாக நிவாரணத் தொகை வழங்குவதற்கான ஆய்வு பணி நடைபெற்று வருகிறது. தமிழ்நாடு முதலமைச்சருடன் கலந்து பேசி முடிவு அறிவிக்கப்படும்.
கறவை மாடுகளை வாழ்வாதாரம் இழந்து தவிக்கும் விவசாயிகள் மற்றும் பொதுமக்களுக்கு அதிக அளவு வழங்க வேண்டும் என்று முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார். அதன்படி கறவை மாடுகள் வழங்கப்பட்டு வருகிறது. ஜல்லிக்கட்டில் ஆன்லைன் பதிவு முறையை ரத்து செய்வது தொடர்பாக ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்கப்படும்" என்றார்.
இதையும் படிங்க: தச்சங்குறிச்சி ஜல்லிக்கட்டு போட்டி: காளை மாடு முட்டியதில் சிகிச்சை பெற்று வந்த இளைஞர் உயிரிழப்பு!