தூத்துக்குடி நாடாளுமன்றத் தொகுதி பாஜக வேட்பாளர் தமிழிசை சௌந்தரராஜன் ஈ.டிவி பாரத்துக்கு பிரத்யேகமாக பேட்டி அளித்தார்.
கேள்வி:வாரணாசி தொகுதியில் பிரதமர் நரேந்திர மோடிக்கு எதிராக விவசாயி அய்யாக்கண்ணு தலைமையில் 111 பேர் மனுத் தாக்கல் செய்ய இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இது பற்றி உங்களது கருத்து?
தமிழிசை: இது மோடிக்கு எதிராக நடத்தப்படும் அப்பட்டமான அரசியல். இலங்கையில் லட்சக்கணக்கான தமிழர்கள் கொன்று குவிக்கப்பட்டபோது ராகுல் காந்திக்கு எதிராக யாரேனும் இப்படிப்பட்ட நிலைப்பாட்டை எடுத்தார்களா?, இல்லையே?. அப்படி இருக்கையில் மோடிக்கு எதிராக இன்று 111 பேர் எடுத்திருக்கும் இந்த அரசியல் நிலைப்பாடு உண்மையில் அரசியல் விளம்பரத்துக்காக மட்டுமே. நல்ல விவசாயிகள் பிரதமர் மோடிக்கு ஆதரவாக உள்ளனர். மோடி ஆட்சியில் தான் விவசாயிகள் பயனடைந்துள்ளனர். அய்யாக்கண்ணு போன்றவர்கள் உண்மையில் விவசாயிகள் அல்ல.
கேள்வி: தூத்துக்குடிக்கு பிரத்யேகமாக வழங்கப்படுகின்ற தேர்தல் அறிக்கையில் மீனவர்களுக்கென சிறப்பு திட்டங்கள் ஏதேனும் உள்ளதா?
தமிழிசை: காங்கிரஸ் ஆட்சி காலத்தில் இருந்தபோது மீனவர்களுக்கென தனி அமைச்சகத்தை ஏற்படுத்துவோம் என்று சொன்னார்கள். ஆனால் பாஜக தான் மீனவர்களுக்கென தனி அமைச்சகத்தை ஏற்படுத்தி, அவர்களுக்கு பல நல்ல திட்டங்களை வழங்கி வருகிறது. ஆழ்கடல் மீன் பிடிப்புக்கு செல்லும் மீனவர்களுக்கு வழங்கப்படும் மானிய தொகையை அதிகப்படுத்தி வழங்க வேண்டும். அந்த தொகைகள் விரைவாக கிடைக்க வழி வகை செய்ய வேண்டும் என மீனவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இது குறித்து அரசு நடவடிக்கைகள் மேற்கொள்ளும்.
கேள்வி: ஆழ்கடல் மீன்பிடிப்பில் மீனவர்கள் காணாமல் போனால் அவர்களின் இறப்பினை உறுதி செய்ய 7 ஆண்டுகள் வரை காத்திருக்கும் நிலை உள்ளது. இதை மாற்றி அமைப்பதற்கான திட்டங்கள் ஏதேனும் தேர்தல் அறிக்கையில் இடம் பெறுமா?
தமிழிசை:ஆழ்கடல் மீன்பிடிப்பில் காணாமல் போகும் மீனவர்களின் இறப்பை உறுதி செய்வதற்கு 7 ஆண்டுகள் வரை காத்திருக்கும் நிலை உள்ளது. ஆகவே இதை குறைக்க வேண்டும் என மீனவர்களின் சார்பில் இருந்து கோரிக்கைகள் பெறப்பட்டுள்ளது. இதுகுறித்து அரசு பரிசீலித்து விரைவாக நடவடிக்கைகள் மேற்கொள்ளும்.
கேள்வி: தூத்துக்குடியில் நீர்வள ஆதாரங்களை மேம்படுத்துவதற்கு வலுவான திட்டங்கள் உள்ளதா?
தமிழிசை: சடையன்நேரி கால்வாய் திட்டம் போன்ற திட்டங்களை செயல்படுத்தும் போது தூத்துக்குடி உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதிகளில் தண்ணீர் பிரச்னையை தீர்க்க முடியும். அதற்கான அறிவிப்புகள் தேர்தல் அறிக்கையில் வெளியிடப்படும் எனக் கூறினார்.
கேள்வி: எதிர்க்கட்சி வேட்பாளர் கனிமொழியை பற்றி உங்களுடைய கருத்து என்ன என கேட்டதற்கு?
தமிழிசை: எதிர்க்கட்சி வேட்பாளர் கனிமொழி நல்ல பெண்மணி. மரியாதைக்குரியவர். ஒரு பெண்ணாக அரசியலில் இவ்வளவு காலம் நீடிப்பது என்பது சாதாரண விஷயம் அல்ல. அதைப் பார்க்கையில் கனிமொழி மரியாதைக்குரியவர். நல்லதொரு வேட்பாளர் என்றார்.