இந்திய குடியுரிமை திருத்தச் சட்டம், தேசிய குடிமக்கள் பதிவேடு மற்றும் தேசிய மக்கள் தொகை பதிவேடு ஆகியவற்றுக்கு எதிரான கண்டனப் பொதுக்கூட்டம் குடியுரிமை திருத்த சட்டம் எதிர்ப்பு பல்சமய பேரியக்கம் சார்பில் தூத்துக்குடி சிதம்பர நகர் பேருந்து நிறுத்தத்தில் நடைபெற்றது.
இந்தப் பொதுக்கூட்டத்திற்கு தூத்துக்குடி மாநகர ஜமாஅத்துல் உலமா சபை துணைத் தலைவர் இம்தாத்துல்லாஹ் தலைமை தாங்கினார். தமிழக வாழ்வுரிமை கட்சியின் தலைவர் வேல்முருகன், முன்னாள் வக்பு வாரிய தலைவர் ஹைதர் அலி, சமூக செயற்பாட்டாளர் ஹென்றி திபேன், பாத்திமா பாபு ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாகக் கலந்துகொண்டு கண்டன உரையாற்றினர்.
இந்தப் பொதுக்கூட்டத்தில் பேசிய தமிழக வாழ்வுரிமை கட்சியின் தலைவர் வேல்முருகன், “இந்தச் சட்டம் இஸ்லாமிய மக்களுக்கு எதிரான சட்டம் மட்டுமல்ல. அடிப்படை அரசியலமைப்புக்கே எதிரான சட்டம். நாம் அரசியலமைப்பை காக்க போராடுகிறோம். இஸ்லாமிய மக்கள் இந்த நாட்டின் பூர்வகுடி மக்கள்.
வரலாற்றின் அனைத்து பக்கங்களிலும் தங்களைப் பற்றிய குறிப்புகளை பதியவைத்த இனம் இஸ்லாமிய இனம். இந்தப் போராட்டமானது மண்ணுக்காக, மக்களின் உரிமைகளுக்காக நடத்தப்படுகிறது. தூத்துக்குடி பகுதியில் உள்ளவர்களைத் தீவிரவாதிகளைப் போல் நினைத்து 15 பேரை சுட்டு காக்கை, குருவிகளைச் சுட்டுக் கொள்வது போல சுட்டுக் கொன்றார்கள்.
இதன்மூலமாக, இந்த அரசு ஸ்டெர்லைட் நிர்வாகத்திடம் பெற்ற லஞ்ச பணத்திற்கு நன்றிகடன் காட்டியுள்ளது. தொப்பி வைத்திருந்தாலும், தாடி வைத்திருந்தாலும் தீவிரவாதி என்று முடிவு செய்து அவர்கள் மீது பொய்க் குற்றச்சாட்டுகளைச் சுமத்தினால் அவன் ஏன் தீவிரவாதியாக மாறமாட்டான்?" என ஆவேசமாகப் பேசினார்.
இதையும் படிங்க: கீழடி ஆறாம் கட்ட அகழாய்வில் தொடர்ந்து வெளியில் தெரியும் செங்கல் கட்டுமானம்