தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தைச் சேர்ந்தவர் ஜெயராஜ். காமராஜர் சிலை அருகில் செல்போன் கடை ஒன்றை நடத்தி வந்த நிலையில், கடந்த 19ஆம் தேதி கடையை லாக்டவுன் நேரத்தை கடந்து திறந்து வைத்திருந்தது பெரும் பூதாகரமாக வெடித்துள்ளது. இதனால், சாத்தான்குளம் காவல் துறைக்கும், ஜெயராஜ் மற்றும் அவரது மகன் பென்னீஸ்க்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து கடந்த 21ஆம் தேதி காவல் துறையினர் இருவரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
இந்நிலையில், நேற்று (ஜூன் 23) மாலை நெஞ்சுவலி ஏற்பட்டு மருத்துவமனையில் பென்னீக்ஸ் அனுதிக்கப்பட்ட நிலையில், அவர் ஏற்கனவே உயிரிழந்ததாக மருத்துவர்கள் தெரிவித்தனர். சிறிது நேரத்தில் அவரது தந்தையும் உயிரிழந்தார். கோவில்பட்டி கிளைச்சிறையில், தந்தைய்ம் மகனும் மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவம் தமிழ்நாட்டில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
காவல்துறையோடு ஏற்பட்ட வாக்குவாதத்தில் காவல் நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்ட தந்தையும், மகனையும் காவலர்களால் அடித்து துன்புறுத்தப்பட்டு இறந்திருக்கலாம் என அருகில் இருப்பவர்கள் தெரிவிக்கின்றனர்.
இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தலைவர் விக்கிரமராஜா, கடையை மூட தாமதமானதால் காவல் துறையினர் இணைந்து 2 பேரையும் அடித்து கொலை செய்தது கண்டிக்கத்தக்கது. அந்த காவல் அலுவலர்கள் மீது கொலை வழக்கு பதிவு செய்து தண்டிக்க வேண்டும். தந்தை,மகனை இழந்த குடும்பத்தினருக்கு நிவாரண தொகையாக 1 கோடி ரூபாயை உடனடியாக தமிழ்நாடு அரசு வழங்க வேண்டும். குடும்பத்தினர் ஒருவருக்கு அரசு வேலை கிடைக்க வேண்டும் என வலியுறுத்தினார்.
இதற்கிடையே, சாத்தான்குளம் சம்பவம் தொடர்பாக 2 எஸ்.ஐ.க்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டு பணியிட மாற்றம் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: சிறையில் தந்தை, மகன் உயிரிழப்பு - 2 எஸ்ஐ இடைநீக்கம்!