தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி ரேவாபிளசா கூட்டரங்கில் தமிழ் தெலுங்கு தேசிய கட்சியின் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில், அக்கட்சியின் தலைவர் இ.வி.எஸ். ராஜ்குமார் கலந்துகொண்டு வரும் சட்டப்பேரவைத் தேர்தல் குறித்து கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினார்.
இதைத் தொடர்ந்து, அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில்,"சுதந்திரப் போராட்ட வீரர் வீரபாண்டிய கட்டபொம்மனுக்கு சென்னையில் வெண்கலச் சிலை வைப்பதற்கு கொள்கை முடிவு எடுத்துள்ள தமிழ்நாடு அரசுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறோம். மாமன்னர் திருமலை நாயக்கருக்கு சென்னையின் பிரதான சாலையில் திருவுருவச் சிலை வைக்க வேண்டும்.
கோவில்பட்டி அருகேயுள்ள இளையரசனேந்தல் பிர்காவை கோவில்பட்டி ஊராட்சி ஒன்றியத்தில் இணைக்க வேண்டும். தூத்துக்குடி மாவட்டத்தில் மிளகாய் வத்தல் கிட்டங்கி அமைக்கப்படும் என்று அறிவித்துள்ளதை வரவேற்கிறோம். ஸ்டெர்லைட் ஆலை பிரச்னை தற்போது நீதிமன்றத்தில் உள்ளது. நீதிமன்ற தீர்ப்பு எதுவாக இருந்தாலும் எங்கள் கட்சி ஏற்றுக்கொள்ளும்.
அனைவருக்கும் முதியோர் உதவித்தொகை தாமதமில்லாமல் கிடைக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். கிராமப்புறங்களில் அரசு உதவித்தொகை பெறும் மக்களுக்கு மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டத்தின்கீழ் பணி வழங்க வேண்டும். தென்மாவட்டங்களில் மழை பொய்த்துப்போன காரணமாக மானாவாரி விவசாயம் முற்றிலுமாகப் பாதிக்கப்பட்டு இதனை நம்பியிருந்தவர்கள் பலரும் வெளிநாடு சென்று வேலைபுரியும் நிலை உள்ளது.
எனவே மானாவாரி விவசாயிகள் குடும்பத்தில் ஒருவருக்கு அவர்கள் பெற்றுள்ள கல்வியின் அடிப்படையில் அரசுப் பணி வழங்க வேண்டும். தமிழ்நாட்டில் ஜாதிவாரி கணக்கெடுப்பு அவசியமாக தேவை, அவ்வாறு செய்தால் உரியவர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் அவர்களின் வாழ்வாதாரம் மேம்படும்.
எனவே போர்க்கால நடவடிக்கையாக தமிழ்நாடு அரசு ஜாதிவாரி கணக்கெடுப்பை நடத்த வேண்டும். தெலுங்கு பேசும் மக்கள் ஓ.சி., பி.சி. என்ற இரு பிரிவில் இருக்கின்றனர். அவர்களை ஒருங்கிணைத்து எம்.பி.சி. பட்டியலின்கீழ் கொண்டுவர வேண்டும். தெலுங்கு பேசும் மக்களை தொடர்ந்து இழிவாகப் பேசிவரும் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான், அவரது கட்சியைச் சேர்ந்த துரைமுருகன் இருவர் மீதும் குண்டர் தடுப்புக் காவல் சட்டத்தின்கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இதன் விளைவுகள் வரும் தேர்தல்களில் எதிரொலிக்கும், தமிழ் தேசியம், தனிதேசியம் என்று சட்டவிரோதமான கருத்துகளைச் சமூக ஊடகங்களில் பரப்பிவருபவர்களை அரசு இரும்புக்கரம் கொண்டு அடக்க வேண்டும். மதுரை மாநகரை உருவாக்கியதில் முக்கியப் பங்காற்றியவர் திருமலை நாயக்கர், மதுரை விமான நிலையத்திற்கு மாமன்னர் திருமலை நாயக்கர் பெயரை சூட்ட வேண்டும்" எனத் தெரிவித்தார்.
இதையும் படிங்க:கடும் எதிர்ப்புகளுக்குப் பிறகு கருத்தை வாபஸ் பெற்ற ஓவைசி கட்சிக்காரர்