தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஒப்பந்ததாரர்கள் சங்கத்தினர் செய்தியாளர்களைச் சந்தித்து பேட்டியளித்தனர். அப்போது பேசிய அச்சங்கத்தின் நிர்வாகிகள், தூத்துக்குடியில் கடந்த இரண்டு ஆண்டுகளாக மூடிக்கிடந்த ஸ்டெர்லைட் ஆலை உயர் நீதிமன்ற தீர்ப்புக்கு பிறகு மீண்டும் திறக்கும் என நம்பிக்கையுடன் இருந்தோம். ஆனால் உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பு எங்களுக்கு அதிர்ச்சி தரக்கூடியதாக இருந்தது.
ஸ்டெர்லைட் ஆலையை மூடியதன் மூலமாக ஒப்பந்ததாரர்கள் மட்டுமின்றி, நிரந்தர தொழிலாளர்கள், மறைமுக தொழிலாளர்கள், பணியாளர்கள் உள்பட 10,000 பேரின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. ஸ்டெர்லைட் ஆலையை மூடியதால் துறைமுகத்திற்கும் பல ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்கு வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது.
இதுபோல சுங்கத்துறை, வருமான வரித்துறை, ஏற்றுமதி இறக்குமதி நிறுவனத்தினர், லாரி ஓட்டுநர்கள், பணியாளர்கள் என பலதரப்பட்ட மக்களும் வருவாய் இழப்பை சந்தித்துள்ளனர். ஸ்டெர்லைட் ஆலையை மூடியதன் பின்பு அதில் பணியாற்றிய தொழிலாளர்களுக்கு மாற்று வேலை வழங்கப்படும் என மாவட்ட ஆட்சியர் உறுதி அளித்திருந்தார். ஆனால் அதன்படி யாருக்கும் எவ்வித வேலை வாய்ப்பையும் ஏற்படுத்திக் கொடுத்ததாக தெரியவில்லை.
கடந்த இரண்டு ஆண்டுகளாக மாற்று தொழிலுக்கும் செல்ல முடியாமல் தொழிலாளர்கள் தங்களது வாழ்க்கையை நகர்த்தி வருகின்றனர். குறிப்பிட்ட காரணத்துக்காக தொழிற்சாலையை மையப்படுத்தி நடத்தப்பட்ட போராட்டத்தினால் அசம்பாவித சம்பவங்கள் ஏற்பட்டு தற்போது மாசு கட்டுப்பாட்டு வாரியத்தால் ஸ்டெர்லைட் ஆலை மூடப்பட்டுள்ளது.
இதனால் எங்களது வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டது மட்டும் தான் மிச்சம். எனவே உயர் நீதிமன்ற தீர்ப்பினை எதிர்த்து உச்ச நீதிமன்றன் செல்ல ஆயத்தமாகியுள்ளோம். தூத்துக்குடியில் மீண்டும் ஸ்டெர்லைட் ஆலையை திறப்பதற்கு தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவித்தார்.
இதையும் படிங்க:தடையை மீறி வைக்கப்பட்ட விநாயகர் சிலைகள் பறிமுதல்!