தூத்துக்குடி மாவட்டம் காட்டுநாயக்கன்பட்டி, நியூ காலனி கருப்பசாமி கோயில் தெருவைச் சேர்ந்தவர் ஆறுமுகவேல் (வயது 73). இவருக்கு சொந்தமாக ஓட்டப்பிடாரம் தாலுகா, மேல அரசடி கிராமத்தில் 2.5 ஏக்கர் நிலம் உள்ளது. இந்த நிலத்தை 9 பேர் கொண்ட கும்பல் கூட்டுச்சதியுடன், ஆள்மாறாட்டம் செய்து போலி ஆவணம் மூலம் பத்திரப்பதிவு செய்து சொத்தை அபகரித்துக்கொண்டனர்.
இதுதொடர்பாக ஆறுமுகவேல் 2017ஆம் ஆண்டு கொடுத்த புகாரின் அடிப்படையில் புதியம்புத்தூர் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுவந்தனர். நீண்ட நாட்களாகியும் விசாரணையில் எவ்வித முன்னேற்றமும் இல்லாததால் ஆறுமுகவேல் தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமாரை நேரில் சந்தித்து, தன்னுடைய சொத்தை மீட்டுத்தருமாறு புகார் அளித்தார்.
அதனடிப்படையில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் நேரடியாக தலையிட்டு புதியம்புத்தூர் காவல் நிலையத்தில் பதிவு செய்யப்பட்ட வழக்கினை ஆய்வு செய்து, உடனடியாக நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார். இதனையடுத்து, புதியம்புத்தூர் காவல் நிலைய காவல் ஆய்வாளர் நடவடிக்கை எடுத்து ஒரு வாரத்திற்குள் போலியாக பதிவு செய்யப்பட்ட பத்திரத்தை ரத்து செய்து ஆறுமுகவேலின் நிலத்தை மீட்டனர்.
மீட்கப்பட்ட நிலத்தின் மதிப்பு ரூபாய் 10 லட்சம் ஆகும். இதைத்தொடர்ந்து மீட்கப்பட்ட 2.5 ஏக்கர் நிலத்தின் அசல் பத்திரங்களை தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் சொத்தின் உரிமையாளரான ஆறுமுகவேலிடம் இன்று ஒப்படைத்தார்.