தூத்துக்குடி வ.உ. சிதம்பரனார் துறைமுகத்தில், மத்திய அரசு எண்ணெய் நிறுவனங்களும் பல்வேறு தனியார் எண்ணெய் நிறுவனங்களும் தங்களது எண்ணெய் சுத்திகரிப்பு மற்றும் எரிவாயு முனையங்களை அமைத்துச் செயல்பட்டுவருகின்றன. அதில் ஒன்றான எஸ்.எஸ்.வி., நிறுவனத்தின் துணை அமைப்பான சூப்பர் கேஸ் நிறுவனத்தின் திட்ட விரிவாக்கப் பணிகளுக்கான அடிக்கல் நாட்டு விழா நேற்று நடைபெற்றது.
இந்த அடிக்கல் நாட்டு விழாவில் வ.உ. சிதம்பரனார் துறைமுகத்தின் தலைவர் தா.கி. ராமச்சந்திரன், தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாகக் கலந்துகொண்டனர்.
இதன்பின்பு செய்தியாளர்களிடம் பேசிய துறைமுகத் தலைவர் தா.கி. ராமச்சந்திரன், "தூத்துக்குடி துறைமுக வளாகத்தில் தொழிற்சாலைகள் நிறுவுவதற்கு எல்லா ஏற்பாடுகளும் நடைபெற்றுவருகின்றன. அதன்படி ஸ்பீட்ஸ் என்ற அமைப்பின் மூலம் துறைமுகத்துக்கு உட்பட்ட நிலங்களில் புதிய தொழிற்சாலைகளை நிறுவுவதற்கான ஏற்பாடுகள் மும்முரமாக நடைபெற்றுவருகின்றன.
அதில் ஒரு பகுதியாக சூப்பர் கேஸ் நிறுவனத்தின் திட்ட விரிவாக்கப் பணிக்கு, துறைமுகத்திற்குச் சொந்தமான 12 ஏக்கர் நிலம் வழங்கப்பட்டுள்ளது. இந்த நிலத்தில் சமையல் எரிவாயு தயாரிக்கப்பட்டு கொள்கலன்களில் அடைக்கப்பட்டு பொதுமக்களின் பயன்பாட்டிற்காக எடுத்துச்செல்லப்படும்.
இதன்மூலம் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு ஏற்படும். மேலும், தூத்துக்குடி துறைமுகத்திற்குச் சொந்தமான இடத்தில் தொழில் தொடங்குவதற்குத் தேவையான எல்லா ஏற்பாடுகளையும் முனைப்புடன் செயல்படுத்தி வருகிறோம்" என்றார்.
இதைத்தொடர்ந்து பேசிய மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி, "ஏற்கனவே 8 ஆயிரத்து 500 மெட்ரிக் டன் அளவு திறன் கொண்ட இந்த நிறுவனம் தற்போது விரிவாக்கப் பணிகளுக்குப் பிறகு, மேலும் அதிகளவில் எரிவாயு நிரப்பும் திறனைப் பெறும். தென் தமிழகத்தில் சமையல் எரிவாயுவின் தேவை அதிகம் இருப்பதை கருத்தில்கொண்டு இந்தத் திட்ட விரிவாக்கப் பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன.
சுமார் 500 கோடி ரூபாய் முதலீட்டில் விரிவாக்க பணிகள் மேற்கொள்ளப்படுவதால், 150க்கும் மேற்பட்டோருக்கு வேலைவாய்ப்பு ஏற்படும். இதுதவிர தூத்துக்குடியில் தொழிற்சாலைகள் வளர்ச்சிக்கும் புதிய தொழிற்சாலைகள் நிறுவுவதற்கும் தேவையான எல்லா நடவடிக்கைகளும் தமிழ்நாடு அரசின் ஒத்துழைப்பின்பேரில் மாவட்ட நிர்வாகம் வழங்கும்" என்றார்.
இதையும் படிங்க: குரூப் 4 தேர்வு முறைகேடு - சிபிஐ விசாரிக்க வைகோ வலியுறுத்தல்!