தூத்துக்குடியில் குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து குடியுரிமை திருத்தச் சட்ட எதிர்ப்பு மக்கள் இயக்கம் சார்பில் விவிடி சிக்னல் அருகேயுள்ள சிதம்பரம் பேருந்து நிறுத்தத்தில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் பங்கேற்று பேசிய ஸ்டெர்லைட் எதிர்ப்பு தமிழர்கள் கூட்டமைப்பினர் ஒருங்கிணைப்பாளர் கிருஷ்ணமூர்த்தியை காவலர்கள் நேற்று கைது செய்து சிறையிலடைத்தனர்.
காவல்துறையின் இந்தச் செயலைக் கண்டித்தும் கிருஷ்ணமூர்த்தியை விடுதலை செய்யக்கோரியும் பச்சை தமிழகம் கட்சித் தலைவர் சுப. உதயகுமார் தலைமையில் பல்வேறு இயக்கங்களைச் சேர்ந்தோர் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியரைச் சந்தித்து இன்று மனு அளித்தனர்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், "மத்திய அரசு பலவந்தமாக நாட்டு மக்களின் மீது குடியுரிமை திருத்தச் சட்டத்தை திணிக்கிறது. இந்திய அரசியல் அமைப்புச் சட்டத்திற்கு எதிராகச் செய்யப்படும் இந்த செயல் குறித்து பல்வேறு இயக்கங்களைச் சேர்ந்தவர்கள் ஒருங்கிணைந்து அறவழியில் ஒரு போராட்டத்தை நடத்தினர்.
இதில் பங்கேற்று பேசிய கிட்டு என்ற கிருஷ்ணமூர்த்தி மீது காவலர்கள் மோசமான பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்து பாளையங்கோட்டை சிறையில் அடைத்துள்ளனர்.
பெண்களை இழிவாகப் பேசிய, பொது மக்களுக்கு பகிரங்கமாக மிரட்டல் விடுத்த பாஜகவைச் சேர்ந்த எஸ்.வி. சேகர், பொன். ராதாகிருஷ்ணன், நயினார் நாகேந்திரன், எச். ராஜா ஆகியோர் மீது எந்த நடவடிக்கையும் எடுக்காத அரசு, அறவழியில் தனது கருத்தைத் தெரிவித்த கிருஷ்ணமூர்த்தியை மட்டும் கைது செய்தது எதற்காக?
கிருஷ்ணமூர்த்தியை விடுதலை செய்ய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையேல் இதுகுறித்த கருத்துகளை மக்களிடையே தீவிரமாக எடுத்துச் செல்வோம்" என்றார்.
இதையும் படிங்க: குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் - ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராளி கைது!