ஒட்டப்பிடாரம் சட்டப்பேரவைத் தொகுதி இடைத் தேர்தல் திமுக வேட்பாளர் எம்சி சண்முகையாவை ஆதரித்து வாக்கு சேகரிப்பதற்காக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் நேற்று முன்தினம் விமானம் மூலம் தூத்துக்குடி சென்றார். ஒட்டப்பிடாரம் தொகுதிக்குட்பட்ட தெற்கு சில்லுக்கன்ப்பட்டி, செக்காரக்குடி, மேல தட்டப்பாறை, கீழத்தட்டப்பாறை உள்ளிட்ட பகுதிகளில் திண்ணை பரப்புரையில் ஈடுபட்டார்.
இரண்டாவது நாளான நேற்றும் தேர்தல் பரப்புரையை அவர் மேற்கொண்டார். மாலை 5 மணி அளவில் குடியிருப்போர் நல சங்க நிர்வாகிகளுடன் ஆலோசனை கூட்டம் நடத்தினார். இதை தொடர்ந்து அவர் மாப்பிள்ளையூரணி, தாளமுத்துநகர், தருவைகுளம், புதியம்புத்தூர், ஒட்டப்பிடாரம் உள்ளிட்ட பகுதிகளில் திமுக வேட்பாளருக்கு ஆதரவாக தேர்தல் பரப்புரையும் செய்தார்.
அதில் அவர் பேசியதாவது, ”மே 19ஆம் தேதி நடந்த பாராளுமன்றத் தேர்தலின் மூலமாக பொதுமக்கள், பிரதமர் மோடியின் ஆட்சிக்கு கடைசி மணி அடித்து இருக்கிறீர்கள். அதுபோல நடைபெற உள்ள சட்டப்பேரவை இடைத் தேர்தலிலும், பொதுமக்கள் திமுகவுக்கு வாக்களித்து, அதிமுகவின் ஆட்சிக்கு கடைசி மணி அடிக்க வேண்டும். திமுக ஆட்சிக்கு வந்ததும் ஒட்டப்பிடாரம் தொகுதியில் குடிநீர் பஞ்சம் தீர்த்து வைக்கப்படும். இது தவிர பஸ் வசதி, சாலை வசதி, ரயில் வசதி ஆகியவை ஏற்படுத்தி தரப்படும். ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடுவதற்கு சட்டம் இயற்றப்படும்” எனக் கூறினார்.