தூத்துக்குடி, நெல்லை, கன்னியாகுமரி, விருதுநகர், உள்ளிட்ட மாவட்டங்களில் உள்ள இலங்கை அகதிகள் முகாமில் இருக்கும் நிர்வாகிகள் தூத்துக்குடியில் கனிமொழி எம்பியை நேரில் சந்தித்து கோரிக்கை மனு அளித்தனர்.
தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய கனிமொழி எம்.பி., "இலங்கை அகதிகள் முகாம்களில் வசிக்கக் கூடிய மக்கள் அவர்களுக்கு இருக்கக்கூடிய பிரச்சினைகளை முதலமைச்சரிடம் எடுத்துக் கூறுவதற்காக என்னை சந்தித்தார்கள். நிச்சயமாக அவர்களின் கோரிக்கையை முதலமைச்சரிடம் எடுத்து செல்வேன்.
முன்னதாக, தூத்துக்குடி இலங்கை அகதிகள் முகாமில் இருப்பவர்களை சந்தித்து குறைகளை கேட்ட போது, அதனை முதலமைச்சரின் கவனத்திற்குக் கொண்டு சென்றேன். நிச்சயம் பரிசீலிப்பதாக முதலமைச்சர் உறுதியளித்துள்ளார்.
இலங்கை தமிழர்களின் குடியுரிமை குறித்து திமுக, ஒன்றிய அரசிடம் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது.சில பேருக்கு சொந்த நாட்டிற்கு திரும்பிச் செல்வதற்கான விருப்பம் இருக்கிறது. அதுவும் பரிசீலிக்கப்பட வேண்டும்.
புதிய கடல் மீன்பிடி சட்டத் திருத்தத்தில் நிறைய பேருக்கு மாற்றுக்கருத்துக்கள் உள்ளன. எல்லா சட்டத்திருத்தத்திலும் வழக்கம்போல மாநில உரிமைகளை தட்டிப் பறிப்பதை முக்கியமான விஷயமாக வைத்திருக்கிறார்கள். எனவே அதைத் எதிர்த்து இருக்கிறோம்.
ஒவ்வொரு ஊரிலும், பல்வேறு விதமான பிரச்சினைகளை மக்கள் எதிர்கொள்கின்றனர். அதைப் புரிந்து கொண்டு அவர்கள் மாநிலத்திற்கான உரிமைகளை தர வேண்டும். அதை விட்டுவிட்டு எல்லா உரிமைகளையும் ஒன்றிய அரசாங்கம் எடுத்துக்கொண்டு நாங்களே முடிவு செய்வோம் என்று நினைக்க கூடாது.
மீனவர்கள் மீது கொண்டுவரப்பட்டுள்ள சட்டம் பழிவாங்கும் நடவடிக்கையாக மட்டுமே இருக்கக்கூடும் பிரச்சினைகளுக்கு தீர்வு ஆக இருக்காது " என்றார்.
இதையும் படிங்க: 'மீடியாவை கண்ட்ரோல் பண்ணுவோம்..' - அண்ணாமலை பகிரங்க மிரட்டல்