இயற்கை மருத்துவ தினத்தை முன்னிட்டு, தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் யோகா மற்றும் இயற்கை மருத்துவத் துறை சார்பில், இயற்கை உணவுப் பொருள்கள் கண்காட்சி நடைபெற்றது. இந்தக் கண்காட்சியை தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி முதல்வர் டாக்டர் திருவாசகமணி தொடங்கிவைத்து பார்வையிட்டார்.
இதையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், “தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பிரதமரின் சிறப்பு சிகிச்சை அளிக்கும் திட்டத்தின் கீழ் 9 கோடி ரூபாய் செலவில், சிறப்பு சிகிச்சை அளிக்கும் கட்டடம் அமைக்கத் திட்டமிடப்பட்டுள்ளது. இந்தத் திட்டம் தேசிய சிறுபான்மையினர் வளர்ச்சிக் கழகத்தின் மூலமாக அமைக்கப்பட உள்ளது. இதில், இருதய நோய், நரம்பியல் நோய், பிளாஸ்டிக் அறுவைச் சிகிச்சை உள்ளிட்ட 8 துறைகளுக்கான சிறப்பு சிகிச்சையளிக்கும் வசதிகள் ஏற்படுத்தப்படும்” என்று கூறினார்.
இதைத் தொடர்ந்து மருத்துவர் பிரேமா செய்தியாளர்களிடம் பேசுகையில், “யோகா மற்றும் இயற்கை மருத்துவ தினத்தை முன்னிட்டு தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் இயற்கை உணவு வகைகள் தொடர்பாக கண்காட்சி வைக்கப்பட்டுள்ளது. இந்தக் கண்காட்சியில் நமக்கு இருக்கக்கூடிய நாட்பட்ட நோய்களை இயற்கை மருத்துவத்தின் மூலம் எவ்வாறு விரட்டலாம் என்பது குறித்து விளக்கப்படுகிறது.
ரத்தசோகை, சர்க்கரை நோய், நீரிழிவு, மூச்சுக் கோளாறு உள்ளிட்ட நோய்களுக்கு மருந்தாக இயற்கை முறையில் எடுத்துக் கொள்ளப்படும் உணவுகள் வகைப்படுத்தப்பட்டுள்ளன. மேலும், கர்ப்பிணிப் பெண்கள் செய்ய வேண்டிய யோகா, அவர்கள் மேற்கொள்ள வேண்டிய உணவு முறைகள், நாட்பட்ட மூட்டுவலி, கழுத்துவலி போன்றவற்றுக்கும் இயற்கை முறையில் என்ன மருத்துவ முறைகள் செய்யலாம் என்பது குறித்தும் விளக்கமளிக்கப்படுகிறது” என்றார்.
இதையும் படிங்க: அரசு மருத்துவமனையில் குடிபோதையில் உறங்கிய பணியாளர்