தூத்துக்குடி: 'உச்சி முதல் வேர் வரை' அனைத்து பாகங்களும் பலன் தரக்கூடியது என்பதால்தான், பனைமரத்தை 'பூலோகத்தின் கற்பகத்தரு' என்கிறார்கள். ஒரு மரத்திலிருந்து 70 வகையான பொருட்களும், 700 வகையான பயனும் கிடைக்கிறது என்று ஆய்வு சொல்கிறது.
தூத்துக்குடி மாவட்டத்தைப் பொறுத்தவரையில், திருச்செந்தூர், ஸ்ரீவைகுண்டம், உடன்குடி, சாத்தான்குளம், ஏரல், அந்தோணியார் புரம், கோரம்பள்ளம், முடிவைதானேந்தல், தங்கம்மாள்புரம், சாயர்புரம், குளத்தூர், கே.சுப்ரமணியபுரம், விளாத்திக்குளம் உள்பட மாவட்டத்தின் பெரும்பாலான பகுதிகளில் பனைத்தொழில் தான் பிரதானமாக செய்யப்படுகிறது. ஆண்டு முழுவதும் பயன்களைத் தரவல்ல பனைமரங்கள் தான் தமிழ்நாட்டின் அடையாளச் சின்னம் என்பதையும் நாம் அறிவோம்.
ஆனால், இன்றைய சூழலில் பனைமரங்கள் சமுதாயத்திற்குப் பகை மரங்களா? என எண்ணும் வகையில் அம்மரங்கள் அழிக்கப்பட்டு வருகின்றன.
ஆண்டு முழுவதும் பயன் தரும் பனைமரம்
உண்மையில் பனைமரங்கள் சமுதாயத்தின் இயற்கை வளங்களைப் பாதுகாக்கும் காவல் மரங்களாகும். பொதுவாக பனைமரங்களுக்கு நீரைத்தேக்கி வைக்கும் தன்மை உண்டு.
பூமியின் எவ்வளவு ஆழத்தில் நீர் இருந்தாலும் அதை உறிஞ்சி எடுத்துக் கொண்டு நெடுநாட்களுக்கு தேக்கி வைக்க வல்லது. அதனால்தான் பனைமரத்தின் மூலம் ஆண்டு முழுவதும் நம்மால் பயன் பெற முடிகிறது.
கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்னர் ஆறு, ஏரி, குளம் கண்மாய் இருந்த இடமெல்லாம் பனைமரங்கள் வளர்ந்து இருப்பதை நம்மால் பார்த்திருக்க முடியும். ஆனால், இன்று அவை அழிக்கப்பட்டதுடன் நீர்நிலை ஆக்கிரமிப்புகளும் அதிகமாகியிருக்கின்றன.
இதன் காரணமாகவே பருவமழை காலங்களில் வெள்ள நீர் குடியிருப்புகளை சூழ்ந்து, மக்கள் கடும் இன்னல்களை எதிர்கொள்கின்றனர்.
ஆக்கிரமிப்பின்பேரில் நீர் வழித்தடங்களையும் அழித்துவிட்டோம். ஆறு, குளங்கள் நிரம்பி, உபரிநீர் செல்ல வழியின்றி சாலை, வீடுகளில் வெள்ளம் தேங்குகிறது.
மனிதன் செய்த தவறை முழுவதும் திருத்திவிட முடியாது எனினும், அதைச் சீர்படுத்த அரசும், சமூக ஆர்வலர்களும் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். பனைமரம் அழிப்பால் நிலப்பரப்பு மட்டுமல்லாது, கடலுக்குள் பெரும் மாற்றம் ஏற்படும் என்பது நம்மில் எத்தனை பேருக்குத் தெரியும்.
பனைமரத்தைப் பாதுகாத்தால் மட்டுமே சுனாமி போன்ற இயற்கைச் சீற்றங்களிலிருந்து நம்மை தற்காத்துக் கொள்ள முடியும். பனைமரங்கள் நீர் வளத்தை மட்டும் பாதுகாக்க வல்லது அல்ல. இயற்கைச் சீற்றங்களின் தாக்கத்தைத் தணிக்கவும், கடலரிப்பைத் தடுக்கவும் உதவும் சிறந்த சுற்றுச்சூழல் நண்பன்.
கடலரிப்பும், பனைமரத்தின் பலனும்
ராமநாதபுரம், தூத்துக்குடி மாவட்டங்களில் கடல் பரப்பினை உள்ளடக்கி மன்னார் வளைகுடா உயிர்க்கோள காப்பக அறக்கட்டளை செயல்பட்டு வருகிறது. இந்த மாவட்டங்களுக்கு இடையேயான கடல் பரப்பில் உள்ள 21 தீவுகளைச் சுற்றிலும் எண்ணற்ற கடல் வளங்கள் கொட்டிக் கிடக்கின்றன.
பவளப்பாறைகள், பல்லுயிர் உயிரினங்கள், கடல் பூச்சிகள், தாவரங்கள், கடற்பசு உள்ளிட்ட பலவகையான கடல்வாழ் உயிரினங்களையும் கடல் வாழ்வியலையும் பாதுகாப்பதே இந்த அறக்கட்டளையின் தலையாயப் பணி.
இந்த அறக்கட்டளையின் கட்டுப்பாட்டில் உள்ள வான்தீவுப் பகுதியில், கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் ஏற்பட்ட கடல் அரிப்பின் காரணமாக 2.4 கிலோ மீட்டர் சுற்றளவு கொண்ட இந்த கடற்பரப்பு 1.5 கிலோ மீட்டராக சுருங்கியது.
இது சமூக ஆர்வலர்களுக்குப் பெரிதும் அதிர்ச்சி அளிக்கக்கூடியதாக இருந்தது. இதற்கு முக்கியக் காரணம் தீவைச் சுற்றியுள்ள பவளப்பாறைகள், கடல் அட்டைகள் போன்ற பல்லுயிர் பெருக்க உயிரினங்கள் வேட்டையாடப்பட்டது தான்.
இதையடுத்து கடற்பரப்பை மீட்க நடவடிக்கை எடுக்கப்பட்டு, மனித நடமாடத்தைக் குறைத்து, அப்பகுதியில் ரோந்துப் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டது.
கடலரிப்பைத் தடுக்கவும், கடல்வாழ் உயிரினங்களின் வாழ்விடங்களை மீட்டெடுக்கவும் அரசும், அறக்கட்டளையும் தனிக் கவனம் செலுத்தி பணிகளை மேற்கொண்டது. அதன்படி 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பனை விதைகள் வான்தீவுப் பகுதியில் தூவப்பட்டது. மரக்கன்றும் நடப்பட்டது.
நிலப்பரப்பு மீட்பு
அதன்பயனாக பனை விதைகள் இன்று முளைவிட்டு வளரத் தொடங்கியுள்ளது. ஒன்றிய, மாநில அரசுகள், வனத்துறை மற்றும் ஆராய்ச்சி நிறுவனங்களின் சீரிய முயற்சியின் காரணமாக வான்தீவில் பவளப்பாறைகளின் வளர்ச்சியும் சீராக உயர்ந்துள்ளது. இதன் விளைவு தீவின் பரப்பளவு மீண்டும் 2 கிலோமீட்டராக நீட்சி அடைந்துள்ளது.
மனிதனின் செயல்களால் அழிவுக்குள்ளாக்கப்பட்ட நிலப்பரப்பு மீண்டும் மீட்டெடுக்கப்பட்டது மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மேலும் தீவுகளைப் பாதுகாக்க அவர்கள் எடுத்த முயற்சியும் கைமேல் பலன் தந்திருப்பது பெரும் உத்வேகத்தை அளித்துள்ளது. இதன் தொடர்ச்சியாக, நல்லதண்ணிதீவு, காசுவாரி தீவு, உப்புத்தண்ணி தீவு உள்பட 10 தீவுகளில் 25 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பனை விதைகள் விதைக்கப்பட்டு, அத்தீவுகளில் 2 அடி உயரத்திற்கு பனை மரங்கள் முளைவிட்டுள்ளன.
சாதாரணமாக, செம்மண் பூமியிலும், கரிசல் பூமியிலும் செழித்து வளரும் பனைமரங்கள், உப்பு நீராலும் பாறைகளாலும் சூழப்பட்ட தீவுக்குள் வளருமா? என சந்தேகிக்காமல் இயற்கையின்பால் நம்பிக்கை வைத்து அறக்கட்டளை, அரசு அலுவலர்கள் எடுத்த முயற்சி பயன் தந்துள்ளது திருப்தி தருகிறது என்கின்றனர், இயற்கை ஆர்வலர்கள்.
இயற்கையால் படைக்கப்பட்டு, மனிதனால் அழிவு நிலைக்குத் தள்ளப்பட்ட பல்லுயிர்ப்பெருக்க இடங்களைக் கண்டறிந்து, உயிர்ப்புற செய்தால் பேரழிவு இல்லா எதிர்காலத்தை வருங்கால சந்ததியினருக்கு வழங்கலாம்.
சமூகம் மாற்றம் காண வேண்டும், நல்ல மாற்றம் காணவேண்டும். எனவே, பனைகளை அழிக்காமல், அதன் எண்ணற்ற பயன்களை மக்கள் அறியும் வகையில் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்று இயற்கை ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர்.
இதையும் படிங்க: அதிமுக தற்காலிக அவைத் தலைவராக தமிழ்மகன் உசேன் நியமனம்