தூத்துக்குடி: தூத்துக்குடி, திருநெல்வேலி, விருதுநகர், மதுரை, திண்டுக்கல் உள்ளிட்ட தென் மாவட்ட மக்கள் தலைநகர் சென்னைக்குப் பயணம் செய்யப் பயன்படுத்தி வரும் ரயில்களில் மிகவும் முக்கியமானதாக உள்ளது திருச்செந்தூர் எக்ஸ்பிரஸ் ரயில். இந்த ரயில் தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் ரயில் நிலையத்தில் இரவு 8:25 மணிக்கு புறப்பட்டு மறுநாள் காலை 10:30 மணிக்கு சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தைச் சென்றடைகிறது.
தினசரி இயக்கப்படும் இந்த ரயிலில் டிக்கெட் கிடைப்பது என்பதே ஓர் அரிதான நிகழ்வு என்பது போல் எப்போதும் பயணிகள் கூட்டம் அதிகமாகவே காணப்படும். அவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்ததாக இந்த ரயில் தென் மாவட்ட மக்களுக்கு விளங்குகிறது. திருச்செந்தூர், காயல்பட்டினம், ஆறுமுகநேரி, குரும்பூர், நாசேரத், ஸ்ரீவைகுண்டம், செய்துங்கநல்லூர்,திருநெல்வேலி, கோவில்பட்டி, சாத்தூர், விருதுநகர், மதுரை, திண்டுக்கல், திருச்சி, தஞ்சாவூர், பாபநாசம், கும்பகோணம், ஆடுதுறை, மயிலாடுதுறை, சீர்காழி, சிதம்பரம், திருப்பாதிபுலியூர், பண்ருட்டி, விழுப்புரம், திண்டிவனம், மேல்மருவத்தூர், செங்கல்பட்டு, தாம்பரம் வழியாக இறுதியாக சென்னை எழும்பூரை சென்றடைகிறது.
மறுமார்க்கத்தில், எழும்பூரில் இருந்து வண்டி எண் (16105) மாலை 4.10 மணிக்கு புறப்பட்டு, தாம்பரம், செங்கல்பட்டு, மேல்மருவத்தூர், திண்டிவனம்,விழுப்புரம், பண்ருட்டி, திருப்பாதிபுலியூர், சிதம்பரம், சீர்காழி, மயிலாடுதுறை, ஆடுதுறை, கும்பகோணம், பாபநாசம்,தஞ்சாவூர், திருச்சி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், சாத்தூர், கோவில்பட்டி, திருநெல்வேலி, செய்துங்கநல்லூர், ஸ்ரீவைகுண்டம், நாசேரத், குரும்பூர், ஆறுமுகநேரி, காயல்பட்டினம் வழியாக காலை 6:10 மணிக்கு சென்றடைகிறது.
இந்த ரயிலில் வணிகம், மருத்துவம், கல்வி, சுற்றுலா, ஆன்மீக ரீதியாக நாளொன்றுக்கு ஆயிரக்கணக்கான தென் மாவட்ட மக்கள் பயணம் செய்து வருகின்றனர். இந்த நிலையில், திருச்செந்தூர் விரைவு வரும் 15-ஆம் தேதி முதல் அதிவிரைவு ரயிலாக மாற்றி தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
அதன்படி, எழும்பூரில் மாலை 4:10 மணிக்கு புறப்படும் அதிவிரைவு ரயில் மறுநாள் காலை 6:10 மணிக்கு திருச்செந்தூர் சென்றைடையும். இதற்கு முந்தைய நேரத்தை ஒப்பிடுகையில் 40 நிமிடங்கள் முன்னதாகவே செல்லும்.மறு மார்க்கத்தில் திருச்செந்தூரில் இரவு 8:25 மணிக்கு புறப்பட்டு மறுநாள் காலை 10:25 மணிக்கு எழும்பூர் வந்தடையும், இதற்கு முந்தைய நேரத்துடன் ஒப்பிடுகையில் 15 நிமிடங்கள் குறையும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
இதையும் படிங்க:அமலாக்கத்துறையின் அடுத்த டார்கெட் அமைச்சர் சேகர் பாபு - எச்.ராஜா வெளியிட்ட தகவல்