தூத்துக்குடி மாவட்டம் வேம்பார் சுப்பிரமணியபுரத்தில் அய்யம்பெருமாள் - செல்வக்கனி தம்பதியர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு 5 ஆண் பிள்ளைகளும் 3 பெண் பிள்ளைகளும் உள்ளனர். மூத்த மகன் சுயம்புலிங்கம் (வயது 49) ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருகிறார். இவருக்குத் திருமணமாகி 3 பெண் பிள்ளைகள் உள்ளனர்.
இவர்களது பூர்வீக சொத்து குறித்து சுயம்புலிங்கம் மற்றும் அவரது தம்பி அணில் என்ற சிவலிங்கத்திற்கும் இடையே பிரச்சினை இருந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் நேற்றைய முன்தினம் (நவ. 20) சுயம்புலிங்கத்தைக் கொலை செய்யும் நோக்கத்தில் அவரது சகோதரர்கள் அணில் என்ற சிவலிங்கம், ராமலிங்கம் உட்பட 6 நபர்கள் பயங்கரமான ஆயுதங்களுடன் வேம்பார் வசந்தா நகரில் உள்ள அவர்களது பூர்வீக தோட்டத்திற்கு சுயம்புலிங்கத்தைத் தேடிச் சென்றதாக கூறப்படுகிறது.
அப்பொழுது அங்கிருந்த மற்றொரு தம்பியான கண்ணன் என்ற செல்வ லிங்கம் மற்றும் அவரது தாயார் செல்வக்கனி ஆகியோர் சிவலிங்கம், ராமலிங்கம் ஆகியொரிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டதாகவும், அப்போது சிவலிங்கமும், ராமலிங்கமும் அவர்களது தாயார் செல்வக்கனியை கட்டையால் சரமாரியாக அடித்ததாகவும் கூறப்படுகிறது.
மேலும் தடுக்க சென்ற தம்பியான செல்வ லிங்கத்தையும் அவர்கள் அடித்து கீழே தள்ளிவிட்டு அரிவாளால் வெட்டியதாக சொல்லப்படுகிறது. இதில் அவரது இடது பக்க தலையில் பலத்த வெட்டுக்காயமும் தடுக்க முயன்றபோது வலது கை கட்டைவிரலும் வெட்டுப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து அருகில் உள்ளவர்கள் அவர்கள் இருவரையும் மீட்டு வேம்பார் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்து உள்ளனர்.
அங்கு அவர்களுக்கு முதலுதவி வழங்கப்பட்டு அங்கிருந்து உயர் சிகிச்சைக்கு 108 ஆம்புலன்ஸ் மூலமாக தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் அனுமதித்து உள்ளனர். இச்சம்பவம் குறித்து புகார் அளித்தும் சூரங்குடி போலீசார் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றும் பெரியசாமிபுரத்தைச் சேர்ந்த காவலரான பாக்கியராஜ் என்பவர் சிவலிங்கம் மற்றும் ராமலிங்கம் ஆகியோருக்கு ஆதரவாக கொலை மிரட்டல் விடுத்ததாக சுயம்புலிங்கம் குற்றம் சாட்டியுள்ளார்.
இதையும் படிங்க: உத்தரகாசி சுரங்கப்பாதை விபத்து; சுரங்கத்தில் செங்குத்தாக துளையிடும் இடம் கண்டுபிடிப்பு!