தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி கயத்தாறு வடக்கு தெருவைச் சேர்ந்தவர் பாலசுப்ரமணியன் மகன் சுரேஷ் (22). இவர் சமையல் தொழிலில் ஈடுபட்டு வந்துள்ளார். இந்த நிலையில் நேற்று (அக் 16) நள்ளிரவில் சுரேஷின் வீட்டுக்கு வந்த மர்ம நபர்கள் வீட்டு கதவை தட்டியுள்ளனர்.
அப்போது சுரேஷின் தாயார் ரேவதி கதவைத் திறந்தவுடன், ஆறு பேர் கொண்ட கும்பல் அவரது தாயாரை தள்ளிவிட்டு வீட்டுக்குள் புகுந்துள்ளது. பின்பு அங்கு படுத்திருந்த சுரேஷ்சை சரமாரியாக கத்தியால் குத்தி விட்டு அக்கும்பல் தப்பிச் சென்றுள்ளது. இதனை அறிந்த அக்கம் பக்கத்தினர் உடனடியாக சுரேஷை மீட்டு திருநெல்வேலி மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர்.
ஆனால், மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே சுரேஷ் உயிரிழந்தார். இதனையடுத்து இச்சம்பவம் தொடர்பாக கயத்தாறு காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து, திருநெல்வேலியை சேர்ந்த பந்தல்ராஜ் உள்ளிட்ட 6 நபர்களை பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இவர்களிடம் நடத்தப்பட்ட முதற்கட்ட விசாரணையில், சுரேஷூம் பந்தல்ராஜூம் இருவரும் ஒரே சமூகத்தை சேர்ந்தவர்கள். இவர்கள் ஒரு சமூக வலைதள குழுவை ஆரம்பித்து, அதில் அவர்களது சமூகம் சார்ந்த கருத்துகளை அவ்வப்போது பரிமாறி வந்துள்ளார். இந்த நிலையில் இந்த கருத்து பரிமாற்றத்தில் சுரேஷ் - பந்தல்ராஜ் இடையே மோதல் வந்துள்ளது.
இதனால் நேற்றிரவு பந்தல்ராஜ் மற்றும் ஐந்து பேர் சுரேஷ் வீட்டுக்குள் புகுந்து, அவரை சரமாரியாக கத்தியால் குத்தி விட்டு தப்பிச் சென்றுள்ளனர்” என தெரிய வந்துள்ளது. மேலும் இதுதொடர்பான விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இதையும் படிங்க: ஆட்டோவில் சென்ற இளம்பெண் கூட்டுப்பாலியல் வன்புணர்வு