தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீர்ப்பு கூட்டத்தில் மனு அளிப்பதற்காக சமூக ஆர்வலரும், வழக்கறிஞருமான சுப்பிரமணியன் என்பவர் தனது ஆதரவாளர்களுடன் வந்திருந்தார். அங்கு அவர், மினி ரேஷன் கடையை அமைத்து பெண்களுக்கு இலவச அரிசி வழங்கி பரபரப்பை ஏற்படுத்தினார்.
இதுகுறித்து சுப்பிரமணியன் செய்தியாளர்களிடம், "தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் வட்டத்திற்குட்பட்ட ஆறுமுகநேரி பஞ்சாயத்தில் 2013-14ஆம் நிதியாண்டுகளில் அப்போதைய சட்டமன்ற உறுப்பினர் அனிதா ராதாகிருஷ்ணனால் புதிதாக ரேஷன் கடை ஒன்று திறக்கப்பட்டது.
கடை திறக்கப்பட்ட ஓரிரு நாட்களில் செயல்பாட்டில் இல்லாமல் போனது. தற்போது வரை செயல்படாமலிருந்து வரும் ரேஷன் கடையை செயல்பாட்டுக்கு கொண்டு வர வேண்டுமென வலியுறுத்தி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஏற்கனவே மனு அளித்துள்ளோம்.
அதன் தொடர்ச்சியாக இன்று நினைவூட்டல் மனு அளிப்பதற்காக வந்துள்ளோம். ரேஷன் கடையை செயல்பாட்டிற்கு கொண்டுவர நடவடிக்கை எடுக்காதததையும், செயல்படாத நிலையிலுள்ள ரேஷன் கடையை நினைவூட்டும் விதமாகவும் மாதிரி ரேஷன் கடையை அமைத்து இலவச அரிசி வழங்குவது போன்றதொரு போராட்டத்தையும் நடத்தி வலியுறுத்தியுள்ளோம்" என்றார். இதனால் அங்கு சிறிது நேரம் சலசலப்பு நிலவியது.
இதையும் படிங்க: ரேஷன் கடை ஊழியர்கள் ஸ்டிரைக்கில் ஈடுபட்டால், சம்பளத்தைப் பிடிக்க உத்தரவு!