தூத்துக்குடி திரேஸ்புரம் மேட்டுப்பட்டி பள்ளிவாசல் தெருவைச் சேர்ந்தவர் செய்யது இப்ராஹீம் ஷா(42). இவர் கடந்த 11ஆம் தேதி மதியம் 1 மணியளவில் அதே பகுதியைச் சேர்ந்த சேஷய்யா(45) என்பவருக்குச் சொந்தமான பைபர் படகில் சக மீனவர்கள் ஐந்து பேருடன் கடலுக்கு மீன் பிடிக்கச் சென்றனர்.
கடந்த 13ஆம் தேதி அதிகாலை 25 நாட்டிக்கல் கடல் மைல் தொலைவில் இப்ராகிம் ஷா மீன்பிடித்துக் கொண்டிருந்தார். அப்பொழுது கடலில் வீசியிருந்த வலையை இழுக்க முயன்ற பொழுது காலில் வலைசிக்கிக் கொண்டதால் அவர் கால் தவறி கடலுக்குள் விழுந்து மூழ்கினார்.
இதைப் பார்த்த சக மீனவர்கள் இப்ராஹிம் ஷாவை காப்பாற்ற முயன்றனர். ஆனால் நீரோட்டம் அதிகமாக இருந்த காரணத்தினால் அவரை கண்டுபிடிக்க முடியவில்லை. இதுகுறித்து தகவலறிந்த தூத்துக்குடி கடலோர பாதுகாப்பு படையினர், கடலோர பாதுகாப்பு காவல்துறையினரும் மாயமான மீனவரை தேடும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வந்தனர்.
இந்நிலையில், இப்ராகிம் ஷாவின் உடல் இன்று பகல் 12 மணிளவில் மீட்கப்பட்டது. இதைத்தொடர்ந்து அவருடைய உடல் திரேஸ்புரம் கடற்கரைக்கு கொண்டுவரப்பட்டு உடற்கூறாய்வுக்காக அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டது.
இதுதொடர்பாக நாட்டுப்படகு மீனவர்கள் சங்க ஒருங்கிணைப்பாளர் ரீகன் கூறுகையில், ‘மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது மீனவர் இப்ராஹீம் ஷா கடலில் தவறி விழுந்து மாயமானார். இந்நிலையில் இன்று அவர் சடலமாக மீட்கப்பட்டு கரைக்கு கொண்டு வரப்பட்டார். இறந்த மீனவரின் குடும்பத்திற்கு கிடைக்கவேண்டிய நிவாரண உதவித் தொகையினை கால தாமதமின்றி தமிழ்நாடு அரசு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்றார்.
இதையும் படிங்க: ஸ்டெர்லைட் துப்பாக்கிச் சூடு: ஒரு நபர் கமிஷன் முன்பு வழக்கறிஞர்கள் ஆஜர்!