தூத்துக்குடி: திருச்செந்தூர் உள்கோட்டம் காவல் துணைக் கண்காணிப்பாளர் ஹர்ஷ்சிங் உத்தரவின்பேரில் காவல் ஆய்வாளர் ஞானசேகரன் மேற்பார்வையில் திருச்செந்தூர் நகரப்பகுதிகளில் காவல் துறையினர் இன்று (ஜூன் 22) ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனர். திருச்செந்தூர் தாலுகா சாலை, அழகர் லாட்ஜ் முன்பாக சந்தேகத்தின் அடிப்படையில் வந்த காரை நிறுத்தி சோதனையிட்டனர்.
சோதனையில், இரண்டு கோடி ரூபாய் மதிப்பிலான சுமார் இரண்டு கிலோ எடையுள்ள அம்பர்கிரிஸ் (Ambergris) எனப்படும் திமிங்கலத்தின் வாயிலிருந்து வெளிவரும் உமிழ்நீர் இருந்தது தெரியவந்தது. இது வாசனை திரவியம் தயாரிப்பதற்குப் பயன்படுத்தப்படும் ஒருவகை பொருளாகும். இது இந்தோனோசியா, இங்கிலாந்து போன்ற வெளிநாடுகளில் கோடி ரூபாய் மதிப்புடையது என்பதும் விசாரணையில் தெரியவந்தது.
இதையடுத்து, காரில் வந்த நபர்களிடம் நடத்திய விசாரணையில் அவர்கள், தஞ்சாவூரைச் சேர்ந்த இளங்கோவன் (52), அருப்புகோட்டையைச் சேர்ந்த ராம்குமார் (27), முகமது அஸ்லம் (33), நாகப்பட்டினம் ஆலியூரைச் சேர்ந்த ராஜா முகமது (34), திருச்சி அரியமங்கலத்தைச் சேர்ந்த வெங்கடேஷ் (48), தஞ்சாவூரைச் சேர்ந்த ஜான்பிரிட்டோ (48) என்பது தெரியவந்தது.
பின்னர், அவர்களைக் கைதுசெய்த காவல் துறையினர், கடல்வாழ் உயிரினங்கள் பாதுகாப்புச் சட்டத்தின்கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்திவருகின்றனர். மேலும், அம்பர்கிரிஸ் கடத்தலுக்குப் பயன்படுத்திய கார் ஆகியவற்றை காவல் துறையினர் பறிமுதல்செய்தனர்.
இதையும் படிங்க: புதுச்சேரியில் இருந்து சாராயம் கடத்தல் - இருவர் கைது