தூத்துக்குடி வழியாக பல்வேறு பகுதிகளுக்கு போதை பொருள்கள் கடத்தப்படுவதாக, மத்திய போதை பொருள் தடுப்புப் பிரிவு அலுவலர்களுக்கு ரகசியத் தகவல் கிடைத்தது. இதன் பேரில், கடந்த சில நாள்களாகவே மாவட்டம் முழுவதும் அலுவலர்கள் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுவருகின்றனர்.
இந்நிலையில், தூத்துக்குடி புதிய பேருந்து நிலையம் அருகே சுற்றித் திரிந்த நபரை சந்தேகத்தின் அடிப்படையில், மடக்கி பிடித்து விசாரணை செய்ததில், அவர் பையில் மறைந்து வைத்திருந்த ஐந்து கஞ்சா எண்ணெய் (ஹதீஷ்) பாக்கெட்டுகள் கண்டறியப்பட்டன. சுமார் 5 கோடி ரூபாய் மதிப்பிலான அவற்றை பறிமுதல் செய்த போதை பொருள் தடுப்பு பிரிவு அலுவலர்கள் தொடர்ந்து அவரிடம் விசாரணை மேற்கொண்டதில் அவர் தூத்துக்குடியை சேர்ந்த ராஜேஷ் என்பது தெரியவந்தது. இதனையடுத்து, அவரை கைது செய்து தென்பாகம் காவல் நிலையத்திற்கு அழைத்து சென்றனர். பின் அங்கிருந்து அவரை மதுரைக்கு கொண்டு சென்றனர்.
தூத்துக்குடியில் கடந்த மாதம் ஒரு வீட்டில் பதுக்கி வைத்திருந்த 26 கிலோ சாரஸ் என்னும் போதை பொருளை அலுவலர்கள் பறிமுதல் செய்துள்ளனர். மேலும் மாவட்டத்தில் கடந்த இரண்டு மாதங்களில் மட்டும் போதை பொருள் தடுப்பு பிரிவு அலுவலர்கள் நடத்திய அதிரடி வேட்டையில், சுமார் 7 கோடி ரூபாய் மதிப்பிலான போதை பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.