தூத்துக்குடி: வங்கக் கடலில் புதிதாக உருவாகியுள்ள காற்றழுத்தத் தாழ்வு மண்டலத்தால், தமிழ்நாட்டில் தென் கடலோர மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்தது.
இதைத் தொடர்ந்து தென் மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை கொடுக்கப்பட்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. இந்நிலையில் தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த இரு நாள்களாகப் பரவலாக மழை பெய்துவருகிறது.
பள்ளிகளுக்கு விடுமுறை
மேலும் இன்று (நவம்பர் 25) காலை முதலே தூத்துக்குடி மாவட்டம் முழுவதிலும் இடைவிடாது பரவலாக கனமழை பெய்துவருவதால் சாலைகளில் மழைநீர் தேங்கி வெள்ளக்காடாக காட்சி அளிக்கிறது. மாநகராட்சியின் தாழ்வான பகுதிகளில் மழை வெள்ளம் தேங்கி குடியிருப்புகளை சூழும் நிலை உருவாகியுள்ளது.
மழை வெள்ளத்தால் பாதிக்கப்படும் மக்களைப் பாதுகாப்பாக நிவாரண முகாம்களில் தங்கவைப்பதற்கு மாவட்டம் முழுவதும் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. அதன்படி நிவாரண முகாம்களில் தங்கவைக்கப்படும் மக்களுக்கு உணவு, உடை, மின்சாரம் உள்ளிட்ட அடிப்படை வசதிகளும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில் தொடர்ந்து பெய்துவரும் கனமழை காரணமாக தூத்துக்குடி மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மதியம் முதல் விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
இதனைத் தொடர்ந்து தூத்துக்குடி மாவட்டத்தில் தொடர்ந்து கனமழை பெய்துவருவதால் முன்னதாக ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ள நிலையில் தற்போது ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: கன்னியாகுமரியில் 4 மணி நேரமாக இடைவிடாது பெய்து வரும் கனமழை