தூத்துக்குடி: திருச்செந்தூர் அருகே உள்ள முருகேசபுரத்தில் இருக்கும் தனியார் மேல்நிலைப் பள்ளியில் சுமார் 300க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பயின்று வருகின்றனர். இந்த நிலையில், இப்பள்ளி நிர்வாகம் கரோனா காலகட்டத்தில் மன அழுத்தத்தில் இருந்த மாணவர்களின் மனஅழுத்தத்தை குறைக்கவும், பண்டைய கால வரலாற்றை மாணவர்கள் தெரிந்து கொள்ளவும், பொன்னியின் செல்வன் திரைப்படத்திற்கு மாணவ, மாணவிகளை அழைத்துச்செல்ல முடிவு செய்தனர்.
இதன்படி இன்று (அக் 20) திருச்செந்தூர் கிருஷ்ணா திரையரங்கில், சுமார் 200 மாணவ, மாணவிகள் பொன்னியின் செல்வன் திரைப்படத்தைக் கண்டு ரசித்தனர். இதற்காக திரையரங்கம் சார்பில் சிறப்புக்காட்சி ஏற்பாடு செய்யப்பட்டதுடன், மாணவர்களுக்கு டிக்கெட் கட்டணச்சலுகையும் வழங்கப்பட்டுள்ளது.
மேலும் இந்தத் திரைப்படத்தைப் பார்க்க வந்த மாணவ, மாணவிகள் செல்ஃபி எடுத்துக்கொண்டு தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். தொடர்ந்து இந்த திரைப்படத்தின் மூலம், கரோனா மற்றும் நவீன கால மாற்றத்தினால் ஏற்பட்டுள்ள மாணவர்களின் மன அழுத்தத்தைக் குறைக்கவும், பண்டையகால வரலாற்றைப் பற்றி மாணவர்கள் தெரிந்து கொள்ளவும் இது ஒரு நல்வாய்ப்பாக அமைந்ததாக பள்ளி மாணவர்களும், தாளாளரும் தெரிவித்தனர்.
இதையும் படிங்க: பொன்னியின் செல்வன் படம் பார்க்க சென்றால் பாப்கார்ன் கட்டாயம் வாங்க வேண்டுமா? - ரசிகர் கேள்வி