தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டியில் உள்ள அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் 2017-18, 2018-19ஆம் கல்வியாண்டுகளில் பிளஸ் 2 படித்த மாணவிகள் தமிழ்நாடு அரசின் விலையில்லா மடிக்கணினிகள் பெற திரண்டனர்.
குறிப்பாக, பள்ளியில் மடிக்கணினி தர மறுக்கின்றனர் எனக்கூறி, கோட்டாட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர். தொடர்ந்து அவர்கள் கோட்டாட்சியர் ஜே.விஜயாவிடம் முறையிட்டனர்.
அதையடுத்து கோட்டாட்சியர், பள்ளியின் உதவி தலைமை ஆசிரியை ருத்ர ரத்தினகுமாரியை அழைத்து பேச்சுவார்த்தை நடத்தினார். இதில், '479 மடிக்கணினிகள் வந்துள்ளது. இதில், இன்று (நவ.26) 2018-19ஆம் ஆண்டு பிளஸ் 2 முடித்த மாணவிகளுக்கு மடிக்கணினிகள் வழங்கப்படும். மீதமுள்ளவர்களுக்கு மடிக்கணினிகள் வந்தவுடன் உடனடியாக வழங்கப்படும்' என தெரிவித்தார்.
மடிக்கணினிகள் வந்தவுடன் அனைத்து மாணவிகளும் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என கோட்டாட்சியர் உறுதியளித்தார். இதையடுத்து மாணவிகள் கலைந்து சென்றனர்.
இதுகுறித்து பள்ளி தரப்பில் கூறுகையில், ''2017-18, 2018-19ஆம் கல்வியாண்டுகளில் மொத்தம் 1092 மாணவிகளுக்கு மடிக்கணினிகள் வழங்க வேண்டும். ஆனால், 479 மடிக்கணினிகள் தான் வரப்பெற்றுள்ளன. எங்களுக்கு மடிக்கணினி வரப்பெற்றவுடன் அனைவருக்கும் வழங்கப்படும்'' என்றார்.
இதையும் படிங்க: வேலூரில் மடிக்கணினியால் நடந்த சோகம்: சிறுமி தூக்கிட்டு தற்கொலை!