தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகேவுள்ள விளாத்திகுளம் மார்த்தாண்டம்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் கூலி தொழிலாளி சீனிமுருகன். இவருடைய மனைவி ஜோதிமணி. இவர்களுக்கு இரு மகன்கள் உள்ளனர். இதில், இளைய மகன் அப்பகுதியிலுள்ள தனியார் பள்ளியில் 6ஆம் வகுப்பு படித்து வந்தார்.
சிறுவர்கள் இருவரும் தங்களது பெற்றோரின் செல்போன்களை கொண்டு விளையாடுவது வழக்கம் எனக் கூறப்படுகிறது. மேலும், சகோதரர்களுக்குள் அடிக்கடி செல்போனுக்கு சண்டை வருவதும் வழக்கமாக இருந்து வந்துள்ளது. இந்நிலையில், நேற்று (பிப்.22) காலையில் 9ஆம் வகுப்பு படிக்கும் மூத்த மகன் பள்ளிக்குச் சென்று விட்டார்.
சீனிமுருகன் வேலைக்கு சென்று விட்டார். ஜோதிமணி விருதுநகர் மாவட்டம் சாத்தூரில் நடைபெறும் உறவினர் வீட்டு திருமணத்திற்கு கிளம்பியுள்ளார். கரோனா தொற்று காரணமாக பள்ளி விடுமுறை என்பதால் இளைய மகன் மட்டும் தனியாக வீட்டில் இருந்துள்ளார். தாய் கிளம்பியதும் தானும் திருமண நிகழ்ச்சிக்கு வருவதாக இளைய மகன் கூறியுள்ளார்.
ஆனால், ஜோதிமணி நீ வீட்டில் இரு எனக் கூறியுள்ளார். வீட்டில் இருக்க வேண்டும் என்றால் செல்போனை தரும்படி சிறுவன் கேட்டுள்ளார். இதற்கு மறுப்பு தெரிவித்த ஜோதிமணி, சாப்பிட்டுவிட்டு வீட்டில் இரு, வெளியில் சென்று விளையாடக்கூடாது எனக் கூறிவிட்டுச் சென்றுள்ளார். திருமண நிகழ்ச்சி முடிந்து ஜோதிமணி வீட்டிற்கு வந்து பார்த்தபோது இளைய மகன் தூக்கில் தொங்கியபடி உயிரிழந்த நிலையில் இருந்துள்ளார்.
இதனைக் கண்ட ஜோதிமணி கதறி அழுதுள்ளார். ஜோதிமணியின் அழுகுரலை கேட்ட அக்கம்பக்கத்தினர் விரைந்து வந்தனர். பின்னர், இது குறித்து விளாத்திகுளம் காவல் துறையினருக்குத் தகவல் தெரிவித்தனர். இதையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த காவல் துறையினர், சிறுவனின் உடலை மீட்டு உடற்கூராய்வுக்காக விளாத்திகுளம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும், இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில், தாய் செல்போன் தரவில்லை, தன்னையும் திருமண நிகழ்ச்சிக்கு அழைத்து போகவில்லை என்னும் காரணத்தினால் சிறுவன் தற்கொலை செய்துகொண்டது தெரியவந்தது.
இதையும் படிங்க: பப்ஜி விளையாட்டை மறக்க முடியாமல் சிறுவன் தற்கொலை