தூத்துக்குடி: கோவில்பட்டி பகுதியிலுள்ள ஆலம்பட்டி பகுதியைச் சேர்ந்த பெண் கோமு. இவரிடம், அதே பகுதியைச் சேர்ந்த மாரியப்பன் மற்றும் அவரது மனைவி மங்கையர்கரசி ஆகியோர், கோமுவின் மகனுக்கு வெளிநாட்டில் வேலை வாங்கித்தருவதாகக்கூறி பணம் மோசடி செய்ததாக தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் மனு அளிக்கப்பட்டுள்ளது.
பின்னர் கோமு செய்தியாளர்களிடம் கூறுகையில், “தூத்துக்குடி, கோவில்பட்டி பகுதியிலுள்ள சாலைப்புதூர் பகுதியில் உள்ள மாரியப்பன் என்பவருக்கும், எனது கணவருக்கும் பழக்கம் ஏற்பட்டது. மாரியப்பன் என்பவர் எனது கணவரிடம் எனக்குத் தெரிந்த நபர் வெளிநாட்டில் வேலை வாங்கித் தருகிறார். அவரை அணுகி உன் மகனை வெளிநாட்டிற்கு வேலை பார்க்க அனுப்பி வைப்போம் என்று கூறினார்.
அதன் பின்பு முதலாவதாக, ஒரு லட்சத்து ஐம்பதாயிரம் பணத்தை மாரியப்பன் மனைவி மங்கையர்கரசி, விருதுநகர் மாவட்டத்தைச்சேர்ந்த ராஜி மகன் விஜயன், சென்னையைச் சேர்ந்த எம்ஜிஆர் நம்பி ஆகிய மூவரிடம் கொடுத்தேன். பின்னர், இரண்டாவதாக, மூன்று லட்சம் ரூபாய் பணம் கேட்டனர். அந்த பணத்தையும் கொடுத்தேன். மேலும், தொடர்ந்து பணம் கேட்டனர். இதுவரை 5 லட்சத்து 65ஆயிரம் ரூபாய் வரை பணம் பெற்றனர்.
மேலும், பணம் கேட்டபோது பணம் இல்லை என்று கூறினேன். ஆனால், மாரியப்பன் மனைவி மங்கையர்கரசி எனது வீட்டுப் பத்திரத்தை வைத்து வட்டிக்கு பணம் வாங்கித்தாருங்கள் என்று கூறினார். உடனே என்னால் அவ்வளவு பணத்திற்கு வட்டி கட்ட முடியாது என நான் மறுத்துவிட்டேன். பின்னர் சந்தேகமடைந்து விசாரித்ததில் வெளிநாட்டில் வேலை வாங்கித் தருவதாக ஏற்கெனவே ஒருவரிடம் மங்கையர்கரசி, மாரியப்பன், விஜயன், எம்ஜிஆர் நம்பி, ஆகியோர் ஏமாற்றியது தெரியவந்தது.
இது குறித்து பணத்தை திருப்பிக்கேட்டபோது பணத்தை தருகிறேன் என ஒரு ஆண்டிற்கும் மேலாக ஏமாற்றி வருகின்றனர். மாதம்தோறும் வட்டி கட்டி வருவதால் மொத்தமாக 6 லட்சம் ரூபாய் வரை பணம் தர வேண்டும். ஆகவே, இவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுத்து பணத்தை திரும்ப ஒப்படைக்கும்படி தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் மனு அளிக்க வந்தேன்” என்றார்.
இதையும் படிங்க: திருப்பத்தூர் தலைமை ஆசிரியர் கொலை வழக்கு... இருவர் கைது