தூத்துக்குடி: சாத்தான்குளத்தைச் சேர்ந்தவர் சுந்தரபாண்டி. இவரது மகன் தர்மசுதன்(7), இவர் அதே பகுதியில் உள்ள அரசு நிதி உதவி பெறும் துவக்கப்பள்ளியில் படித்து வருகிறார். காலை தர்மசுதன் பள்ளிக்குச் சென்றுள்ளார். பள்ளியில் மாணவர்களுடன் ஏற்பட்ட சண்டையில் தர்மசுதனை ஆசிரியர் கண்டித்ததோடு மாணவனைப் பள்ளி வகுப்பறையில் அமர வைத்துள்ளார்.
இதனையடுத்து மதியம் 11 மணி அளவில் இடைவேளையின் போது மாணவ, மாணவிகள் அனைவரும் வெளியில் சென்றுள்ளனர். ஆனால் தர்மசுதனை மட்டும் ஆசிரியர் வெளியே செல்ல அனுமதிக்கவில்லை என்று கூறப்படுகிறது. இந்நிலையில், மதியம் உணவு இடைவேளைக்கு வீட்டிற்கு வந்த மாணவன் தர்மசுதன் தனக்கு சிறுநீர் கழிக்கும் இடத்தில் வலி ஏற்பட்டுள்ளதாகக் கூறினான்.
பெற்றோர் அவனிடம் விசாரிக்கும் போது தன்னை மதியம் சிறுநீர் கழிக்க ஆசிரியர் அனுமதிக்கவில்லை என்று கூறி அழுதுள்ளான். உடனே தர்மசுதன் பெற்றோர் பள்ளிக்குச் சென்று முறையிட்டுள்ளனர். ஆனால் பள்ளியில் முறையான பதில் அளிக்கவில்லை. உடனே சாத்தான்குளம் வட்டார கல்வி அலுவலகத்திற்குச் சென்றுள்ளனர். அங்கும் இது குறித்து நடவடிக்கை எடுக்கப்படவில்லை.
இந்நிலையில் சாத்தான்குளம் காவல்நிலையத்திற்குச் சென்ற பெற்றோர், தர்மசுதனையும் அழைத்துச் சென்றுள்ளனர். அங்கு பள்ளியில் நடந்த சம்பவங்களைத் தெரிவித்துள்ளனர். மேலும் இதுகுறித்து புகார் மனு அளித்துள்ளனர். அதனைத் தொடர்ந்து சாத்தான்குளம் மருத்துவமனையில் சிகிச்சைக்காகப் பள்ளி மாணவன் தர்மசுதன் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இதையும் படிங்க:உயர்நீதிமன்ற முன்ஜாமின் ஆவணங்களில் மோசடி; திமுகவை சேர்ந்த இருவர் கைது