தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தை சேர்ந்த வியாபாரிகள் ஜெயராஜ், பென்னிக்ஸ் ஆகியோர் சாத்தான்குளம் காவல் துறையினரால் கைது செய்யப்பட்டு கோவில்பட்டி சிறையில் சந்தேகத்திற்கிடமான முறையில் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது.
விசாரணைக் கைதிகளாக சிறையில் அடைக்கப்பட்ட தந்தை, மகன் இருவரும் காவல்துறையினரால் அடித்து துன்புறுத்தப்பட்டதே அவர்களது இறப்புக்கு காரணம் என கூறப்படுகிறது. இது குறித்து மதுரை உயர் நீதிமன்ற கிளை தாமாக முன்வந்து வழக்கு விசாரணை நடத்தி வருகிறது.
தற்பொழுது இந்த வழக்கை சிபிசிஐடி காவல் துணை கண்காணிப்பாளர் அனில்குமார் கையிலெடுத்து உடனடியாக விசாரணையை தொடங்க வேண்டும் என உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இதையடுத்து சாத்தான்குளம் லாக்கப் மரணம் தொடர்பாக பதிவு செய்யப்பட்ட குற்ற ஆவணங்களை நெல்லை சரக டிஐஜி பிரவீன்குமார் அபினவிடமிருந்து அனில் குமார் பெற்றுக் கொண்டார்.
அதன் அடிப்படையில் சிபிசிஐடி காவல் துணை கண்காணிப்பாளர் அனில் குமார் இன்று புதிதாக குற்ற எண் 12/2020 என்ற எண்ணின் கீழ் வழக்குப்பதிவு செய்து புதிதாக விசாரணையை தொடங்கவுள்ளார்.
சாத்தான்குளம் வியாபாரிகள் ஜெயராஜ் மற்றும் பென்னிக்ஸ் கைது செய்யப்பட்டது தொடர்பாக குற்ற எண் 312/2020 கீழ் முதல் தகவல் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.