தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் உள்ள தனியார் லாட்ஜில் சென்னையைச் சேர்ந்த பிரபல ரவுடி பதுங்கியிருப்பதாக காவல் துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
அதனடிப்படையில் காவல் துணை கண்காணிப்பாளர் கலைக்கதிரவன், மேற்கு காவல் ஆய்வாளர் ஐயப்பன் தலைமையிலான காவல் துறையினர் தனியார் லாட்ஜிற்கு வந்தனர். பின்னர் அவர்கள் லாட்ஜில் ஒவ்வொரு அறையாக சென்று சோதனை செய்தனர்.
திடீரென ஒருவர் தப்பியோடினார். உடனே அந்த அறைக்குள் நுழைந்த காவல் துறையினர் அங்கிருந்த மூன்று பேரை துப்பாக்கி முனையில் கைது செய்தனர். விசாரணையில் திருவாரூர் கோகுல் நகரைச் சேர்ந்த எண்ணூர் தனசேகரன் (39), சென்னை சைதாப்பேட்டையைச் சேர்ந்த மதன்குமார் (32), திருவாரூரைச் சேர்ந்த வக்கீல் அருள்ராஜ் (40) ஆகியோர் என்பது தெரியவந்தது.
ரவுடிகள் தங்கிருந்த அறையில் இரண்டு அரிவாள்கள் பறிமுதல் செய்யப்பட்டது. பின்னர் ரவுடிகளை கைது செய்து கோவில்பட்டி மேற்கு காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர்.
பிரபல ரவுடியான எண்ணூர் தனசேகரன் மீது 10-க்கும் மேற்பட்ட கொலை வழக்குகள் மற்றும் பிடிவாரண்ட் உள்ளன. இதேபோல் மதன்குமார் மீதும் பிடிவாரண்ட் உள்ளது.
மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் ரவுடிகளிடம் விசாரணை செய்தார். அதில் பட்டாசு வாங்க கோவில்பட்டிக்கு வந்ததாக ரவுடிகள் தெரிவித்துள்ளனர்.
மேலும் லாட்ஜில் இருந்து தப்பியோடிய நபர் சென்னையைச் சேர்ந்த அம்பேத் (30) என்பது தெரியவந்தது. இதுகுறித்து சென்னை காவல் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் இன்று (நவ.5) மதுரை வந்தனர்.
அதன்பிறகு தனசேகரன் உள்ளிட்ட 3 ரவுடிகள் சென்னை காவல் துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டனர்.
இதையும் படிங்க: கட்டட மேஸ்திரியிடம் கத்தி முனையில் பணம் பறித்த ரவுடிகள் கைது