தூத்துக்குடி: திருச்செந்தூர் கந்த சஷ்டி விழா கடந்த நவ.14ஆம் தேதி அன்று தொடங்கி, வெகுவிமர்சையக நடைபெற்றது. அதேபோல் விழாவின் முக்கிய நிகழ்வான சூரசம்ஹாரம், நவ.18-ஆம் தேதி நடைபெற்றது. இதில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
இந்த நிலையில், இந்த நிகழ்ச்சிக்காக வழங்கப்பட்ட வாகன அனுமதிச் சீட்டில் கோட்டாட்சியர் கையொப்பம் இல்லாமல் முறைகேடாக அச்சடித்து வழங்கியதாகவும், கோயில் இணை ஆணையர் கார்த்திக் மீது குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளது. இந்த நுழைவுச் சீட்டு வழங்குவதற்கு திருச்செந்தூர் வருவாய் கோட்டாட்சியர், காவல் துணை கண்காணிப்பாளர் மற்றும் கோயில் இணை ஆணையர் ஆகியோர் கையெழுத்திட்டு விநியோகம் செய்ய வேண்டும் என மாவட்ட ஆட்சியர் லட்சுமிபதி தலைமையில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டு இருந்தது.
ஆனால், இந்த விதிகளை கடைப்பிடிக்காமல், கோயில் இணை ஆணையரான கார்த்திக் பல்வேறு முறைகேடுகளில் ஈடுபட்டுள்ளதாக புகார்கள் எழுந்ததுள்ளதாக கூறப்படுகிறது. இதனையடுத்து அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கூறி, தூத்துக்குடி மாவட்ட வருவாய்த்துறை அலுவலர்கள் சங்கம் சார்பில், திருச்செந்தூர் கோட்டாட்சியர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
வருவாய்த்துறை அலுவலரும், அச்சங்கத்தின் மாவட்டத் தலைவருமான சுவாமிநாதன் தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில், கோயில் இணை ஆணையர் கார்த்திக்கை கண்டித்து கண்டன கோஷங்களை எழுப்பினர். இதில் 150க்கும் மேற்பட்ட வருவாய்த் துறையினர் கலந்து கொண்டனர்.
இதையும் படிங்க: உத்தரகாசி சுரங்க விபத்து - அனைத்து தொழிலாளர்களும் பத்திரமாக மீட்பு!