தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி இந்திரா நகரை சேர்ந்த கார்த்திக் என்பவரது செல்போனிற்கு கடந்த 02.03.2023 அன்று வந்த குறுஞ்செய்தியில் Rewards Point Redeem என்னும் லிங்க்கை அவர் கிளிக் செய்துள்ளார்.
அதில் வந்த போலியான இணையதளத்தில் தனது கிரெடிட் கார்டு விவரங்கள், கடவுச்சொல் மற்றும் OTP ஆகியவற்றைப் பதிவு செய்தபோது, அவரின் கிரெடிட் கார்டு கணக்கிலிருந்து ரூபாய் 2,78,500/- பணம் மோசடி செய்யப்பட்டதாக உணர்ந்த கார்த்திக், மேற்படி புகார் அளித்துள்ளார். எனவே, அந்தப் புகாரின் பேரில் தூத்துக்குடி சைபர் குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.
அதேபோன்று கடந்த 09.05.2022 அன்று விளாத்திகுளம், தெற்குத் தெருவை சேர்ந்த நாகு மகன் சங்கர் என்பவர் தனது முகநூல் பக்கத்தில் வந்த வெளிநாட்டு வேலை வாய்ப்பு விளம்பரத்தைப் பார்த்து அதிலுள்ள எண்ணை தொடர்பு கொண்டும், வேலைக்காக ரூ.40,000/- பணமும் அனுப்பியுள்ளார்.
இதனையடுத்து தான் ஏமாற்றப்பட்டதை அறிந்த சங்கர், காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்தப் புகாரின் அடிப்படையில் தூத்துக்குடி சைபர் குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.
மேலும் தூத்துக்குடி, அசோக் நகரை சேர்ந்த பன்வாரிலால் சர்மா மகன் சுசில்குமார் சர்மா என்பவரது வங்கி கிரெடிட் கார்டு கணக்கிலிருந்து சுசில்குமார் சர்மாவின் அனுமதியின்றி, பல தவணைகளாக மொத்தம் ரூபாய் 1,48,999/- எடுக்கப்பட்டுள்ளதாக குறுஞ்செய்தி வந்தததையடுத்து மேற்படி சுசில்குமார் சர்மா அளித்த புகாரின்பேரில் தூத்துக்குடி சைபர் குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.
இதனைத் தொடர்ந்து, சைபர் க்ரைம் சம்பவங்கள் குறித்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் எல். பாலாஜி சரவணன் உத்தரவின்படி, சைபர் குற்றப்பிரிவு காவல்துறை கூடுதல் கண்காணிப்பாளர் (பொறுப்பு) கார்த்திகேயன் மேற்பார்வையில் சைபர் குற்றப்பிரிவு காவல் ஆய்வாளர் சிவசங்கரன் தலைமையிலான போலீசார் தொழில் நுட்பரீதியாக விசாரணை மேற்கொண்டுள்ளனர். மேலும் சம்மந்தப்பட்ட வங்கிகளுக்கு, மின்னஞ்சல் அனுப்பப்பட்டு நடவடிக்கை மேற்கொண்டு, மோசடி செய்யப்பட்ட மொத்தம் ரூபாய் 4,67,499/- பணம் மீட்கப்பட்டது.
மேற்படி மீட்கப்பட்ட ரூபாய் 4,67,499/- பணத்தை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் எல். பாலாஜி சரவணன் உத்தரவின்படி, (21.03.2023) அன்று சைபர் குற்றப்பிரிவு காவல் நிலையத்தில் வைத்து சைபர் குற்றப்பிரிவு காவல்துறை கூடுதல் கண்காணிப்பாளர் கார்த்திகேயன் அவர்களின் மேற்பார்வையில் பாதிக்கப்பட்டவர்களிடம் ஒப்படைத்தார்.
மேலும், பொதுமக்கள் செல்போனில் தெரியாத எண்ணிலிருந்து வரும் வங்கி SMS அல்லது வாட்ஸ்அப்பில் இருக்கும் எந்தவித லிங்குளையும் கிளிக் செய்ய வேண்டாம் என்றும், அதில் உங்கள் வங்கி விவரங்களை உள்ளீடு செய்ய வேண்டாம் என்றும், பணப்பரிவர்த்தனைகளை செய்யும்போது சம்பந்தப்பட்ட வங்கியின் உண்மையான இணையதளமா? என்பதை உறுதி செய்த பின்னர் பயன்படுத்தவேண்டும் என்றும், ஃபேஸ்புக், வாட்ஸ்அப் மற்றும் இணையதளத்தில் வரும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் கப்பல்களில் வேலைவாய்ப்பு போன்ற விளம்பரங்களைப் பார்த்து முகம் தெரியாத நபர்களுக்கு பணம் அனுப்பி ஏமாறவேண்டாம் என்றும், பொதுமக்கள் இது போன்ற சைபர் குற்றங்களில் இருந்து தங்களை தற்காத்துக் கொள்ள விழிப்புணர்வுடன் இருக்கவேண்டும் என்று மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் எல். பாலாஜி சரவணன் அறிவுரைகளும், எச்சரிக்கைகளும் வழங்கினார்.
இதையும் படிங்க:கேமரா, ரகசிய குறியீடுகளுடன் புறாக்கள் மீட்பு - உளவு பார்க்கப்பட்டதா?