தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி கோட்டாட்சியர் அலுவலகத்தினை காங்கிரஸ் கட்சியின் மாவட்ட துணைத் தலைவர் அய்யலுச்சாமி தலைமையிலான காங்கிரஸ் கட்சியினர் ராஜிவ் காந்தி, முன்னாள் மத்திய அமைச்சர் வாழப்பாடி ராமமூர்த்தியின் திருவுருவப் படங்களை கையில் ஏந்தியவாறு முற்றுகையிட்டனர்.
அப்போது ஸ்ரீபெரும்புதூரில் உள்ள மறைந்த முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தி நினைவிடத்தில் நின்றுகொண்டு, ' ராஜிவ் காந்தியினை நாங்கள் தான் கொன்றோம்' என்ற நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமானின் பேச்சிற்கு டிக்டாக் செய்த இளைஞரைக் கைதுசெய்ய வேண்டும் என்றும்; விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் படத்தையும், அவரது பெயரையும் பயன்படுத்துபவர்கள் மீது தேச விரோத வழக்கினைப் பதிவு செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தினர்.
இதைத்தொடர்ந்து தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி கோட்டாட்சியர் அலுவலக நுழைவு வாயிலில் இருந்து, கோட்டாட்சியரின் இருக்கை வரை, அய்யலுச்சாமி அங்கப்பிரதட்சணம் செய்தார். மேலும் கோரிக்கை அடங்கிய மனுவினையும் கோட்டாட்சியரிடம் வழங்கினார்.
மனுவினைப் பெற்றுக்கொண்ட கோட்டாட்சியர், கோரிக்கை மனு அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்ததைத் தொடர்ந்து காங்கிரஸ் கட்சியினர் போராட்டத்தினைக் கைவிட்டனர்.
இதையும் படிங்க... ராஜீவ்காந்தி நினைவிடத்தில் டிக்டாக்: கே.எஸ்.அழகிரி கண்டனம்