அரவக்குறிச்சி, திருப்பரங்குன்றம், ஓட்டப்பிடாரம், சூலூர் ஆகிய நான்கு தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் மே.19ஆம் தேதி நடைபெறவுள்ளது. இதற்கான பரப்புரையில் திமுக, அதிமுக இருகட்சிகளும் தீவிரமாக இயங்கி வரும் நிலையில், அதிமுக வேட்பாளர் மோகனை ஆதரித்து அமைச்சர்கள் ராஜேந்திர பாலாஜி, கடம்பூர் ராஜு உள்ளிட்டோர் பரப்புரை மேற்கொண்டனர். அப்போது அமைச்சர் ராஜேந்திர பாலாஜி பேசுகையில், அதிமுக அரசு மக்கள் நலன் சார்ந்த திட்டங்கள், தொலை நோக்கு திட்டங்கள் என எதனையும் குறைக்கவில்லை.
மேலும், காழ்ப்புணர்ச்சி காரணமாக ஒரு பக்கம் திமுகவும், மறுபக்கம் நம்மிடமிருந்து பிரிந்து சென்றவர்களும் துரோகிகளாக மாறி பொய் பரப்புரை மேற்கொண்டு வருகின்றனர். ஓட்டப்பிடாரம் என்றுமே அதிமுகவின் கோட்டையாகதான் உள்ளது. இந்த கோட்டைக்குள் திமுகவிற்கு வேலையில்லை. ஓட்டப்பிடாரம் தொகுதியில் திமுக இனி எந்த காலத்திலும் போட்டியிடவே நினைக்கக்கூடாது என்கிற அளவிற்கு வாக்காளர்கள் திமுகவிற்கு தேர்தலில் மரண அடி கொடுக்க வேண்டும் என்றார்.