தூத்துக்குடி லூர்தம்மாள்புரத்தைச் சேர்ந்தவர் மீராசா. கடலில் தொழில் செய்துவரும் இவர், குறிப்பாக தடை செய்யப்பட்ட கடல் அட்டை பிடிக்கும் தொழிலும் செய்து வருகிறார். இது தொடர்பாக தூத்துக்குடி தாளமுத்து நகர் காவல்நிலையம் மற்றும் மன்னார் வளைகுடா, வன காப்பகத்தில் பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளன.
அரசியல் பின்புலமிக்க இவர் மீது இதுவரை வழக்குகள் பதியப்படவில்லை என்றாலும் கூட வனத்துறை மற்றும் காவல்துறையால் கடல் அட்டை பிடிபடும் போது இவரது பெயர் அடிபடுவது உண்டு. இந்நிலையில், கடல் அட்டையை தூத்துக்குடியைச் சேர்ந்த மீனவர்களை கொண்டு பிடிப்பது காவல்துறைக்கு தெரியவந்தது.
இதைத்தொடர்ந்து, இலங்கையைச் சேர்ந்த ஏழு மீனவர்கள் லாக் டவுனுக்கு முன்னதாக மீராசாவிற்கு சொந்தமான கிட்டங்கியில் தங்கி கடல் அட்டை பிடிக்கும் தொழிலில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில், கரோனா ஊரடங்கால் இவர்கள் தங்களது சொந்த நாட்டிற்கு செல்ல இயலாத நிலை ஏற்பட்டது. இது குறித்து கடலோர காவல்படைக்கு தகவல் கிடைத்ததை தொடர்ந்து அங்கு சென்று சோதனையிட்டனர்.
அதில் விசா காலம் நிறைவடைந்த நிலையில் இலங்கை மன்னார் மாவட்டத்தை சேர்ந்த வில்பி, குயிண்டாஸ், ஆரோக்கியம், சுமன்நா அப்பு, அந்தோணி ரூபசிங்கே, விக்ரம் சின்ஹா, ரவிச்சந்திரன் உள்ளிட்ட ஏழு மீனவர்கள் இருப்பது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து க்யூ பிரிவு அலுவலர்களும் அவர்களிடம் தீவிர விசாரணை மேற்கொண்டனர். இதையடுத்து இலங்கை மீனவர்கள் ஏழு பேரும் தாளமுத்துநகர் காவல் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டனர்.