தூத்துக்குடி மாவட்டம் பொட்டலூரணி கிராமத்தின் சுற்றுவட்டாரப் பகுதிகளில் தனியார் நிறுவனத்தின் சார்பில் காற்றாலை அமைக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. காற்றாலை அமைப்பதற்கு தேவையான உபகரணங்களை கொண்டு செல்வதற்கு பொட்டலூரணி கிராம சாலைதான் முக்கிய வழித்தடமாக இருக்கிறது. இந்நிலையில், காற்றாலை உபகரணங்கள் கொண்டு செல்ல அப்பகுதியில் உள்ள பயணிகள் நிழற்குடை இடையூறாக இருந்துள்ளது.
இதனால் காற்றாலை நிறுவனம் பொட்டலூரணி கிராம மக்களின் அனுமதி இல்லாமல் அங்கிருந்த பயணியர் நிழற்குடையை இரவோடு இரவாக ஜேசிபி கொண்டு இடித்துள்ளனர். இந்த சம்பவம் அறிந்த பொட்டலூரணி கிராம மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். மேலும், பொட்டலூரணி கிராமத்தைச் சேர்ந்த இளைஞர்களிடம் வேலையில்லா சூழ்நிலையை பயன்படுத்தி காற்றாலை நிறுவனத்திற்கு ஒத்துழைத்து உதவுமாறு இளைஞர்களுக்கு 50,000 மதிப்பிலான காசோலை வழங்கியுள்ளதாக குற்றம் சாட்டினர்.
ஒரு தனியார் நிறுவனத்திற்காக அரசு சொத்தை சேதப்படுத்திய மர்ம நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் தரப்பில் புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக திருவைகுண்டம் தாசில்தார் சந்திரனிடம் கிராம மக்கள் புகார் அளித்தனர். ஆனால் வெகு நேரமாகியும் காவல்துறையினர் யாரும் வராததால் ஆத்திரமடைந்த கிராம பொதுமக்கள் திருநெல்வேலி தூத்துக்குடி நெடுஞ்சாலையில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த புதுக்கோட்டை காவல் துறையினர் சாலை மறியலில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினர்.
பின்னர், குற்றவாளிகள் மீது நடவடிக்கை எடுத்து கைது செய்வோம் என போலீசார் உறுதியளித்த பின்னர் போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.