மூலஸ்தான பூஜையில் போத்திகள்:திருச்செந்தூர் முருகன் கோயிலைப் பொறுத்தவரையிலும் தொட்டு பூஜிக்க இரண்டு வகையான சாதியினர் அனுமதிக்கப்படுகின்றனர். மூலஸ்தான பூஜையில் போத்திகள் ஈடுபடுகின்றனர். இவர்கள் கேரளாவைப் பூர்வீகமாக கொண்டவர்கள். மூலஸ்தானத்தில் சிவலிங்கத்தை பூஜிக்கும் தோற்றத்தில் காணப்படும் முருகனின் சிலைக்கு அபிஷேகம், ஆராதனை அனைத்தும் இவர்கள் மூலமாகவே நடக்கும். இதே போன்று ஆஸ்தான உற்சவரான சண்முகரை தொட்டு வழிபட "பட்டர்கள்" எனப்படும் சிவாச்சாரியார்கள் மட்டுமே அனுமதிக்கப்படுகின்றனர்.
திரிசுதந்திர கைங்கரியம்: மூலஸ்தானம், ஆஸ்தான உற்சவர் என இரண்டு வழிபாட்டிலும் இல்லாவிட்டாலும், பெயருக்கேற்றவாறு கோயிலில் சர்வசுதந்திரத்துடன், பாரம்பரியமாக உரிமையோடு வலம் வந்தவர்கள் தான் திரிசுதந்திரர்கள். போத்திகள் மற்றும் பட்டர்களைக் காட்டிலும் எண்ணிக்கையில் இவர்கள் தான் அதிகம். கட்டளைதாரர்கள் கோயிலுக்கு வழிபாடு நடத்த வந்தாலும் திரிசுதந்திரர்கள் மூலமாகவே முருகனை தரிசிக்கின்றனர்.
கோயிலினுள் மகா மண்டபத்தில், பக்தர்களிடம் தேங்காய்ப்பழம் வாங்கி அர்ச்சனை செய்வதும் திரிசுதந்திரர்கள் தான். மூலஸ்தானத்தில் பூஜை செய்வது போத்திகள் என்றாலும்; பக்தர்களுடனான தொடர்பு, அர்ச்சனைகளை கையாள்வது என அனைத்தும் இவர்கள் தான். சுதந்திரமாக கோயிலில் வளைய வந்த திரிசுதந்திரர்களை டோக்கன் சிஸ்டம் முறையில் ஒருநாளைக்கு 100 பேர் மட்டுமே அனுமதி என சமீபத்தில் கிடுக்கிப்பிடி போட்டது, அறநிலையத்துறை. ஆனால், இது தங்களை பழிவாங்கும் நடவடிக்கை என அவர்கள் கூறுகின்றனர்.
பூர்வீக குடிகள் நாங்கள்:திரிசுதந்திரர்களின் பிரதிநிதியாக நம்மிடம் பேசிய திரு.ஈஸ்வர மூர்த்தி கூறுகையில், 'நிர்வாகத்தைச் சரி செய்கிறோம் என்ற பெயரில் திரிசுதந்திர பிராமணர்களாகிய எங்களை பழிவாங்கும் நடவடிக்கையாக இதைப் பார்க்கிறோம். நாங்கள் இக்கோயிலின் பூர்வீக குடிமக்கள். சின்ன சின்ன பிரச்னையை பெரிதுபடுத்துகிறார்கள். ஆனால், கோயிலில் இப்போது வரை பக்தர்களுக்கு கழிவு நீர், குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் சரியாக இல்லை.
ஊதியம் பெறாமல் உழைக்கிறோம்:நாங்கள் மாத ஊதியம் பெறாத பூர்வீகக் குடிமக்கள். கோயிலை வளர்த்தெடுத்ததில் எங்கள் முன்னோர்களுக்கும் பங்கு உண்டு. அதனால் தான் நகை பொறுப்பில் இன்றுவரை நாங்கள் இருக்கிறோம். தற்போது வரை எங்களிடம் இரண்டு சாவிகள் கையில் உள்ளன. எங்கள் சமூகத்தினர் வளர்வதை பிடிக்காமல் எங்களைக் கட்டுப்படுத்தும் நோக்கில் எங்கள் மீது குற்றம்சாட்டுகின்றனர். நாங்கள் எல்லோரும் அதிமுக வாக்காளர்கள் என அவர்கள் கருதுகிறார்கள்.
இது ஒரு மௌன அடக்குமுறை. கோயிலுக்கு வரும் பெரிய பெரிய விஐபிக்கள் முதலில் எங்களைத்தொடர்பு கொண்டு தான் பேசுகின்றனர். அமைச்சர் வரை எங்களிடம் பேசுவதை பொறுத்துக்கொள்ள முடியாமல் பழி வாங்குகின்றனர். சஷ்டி, பிரதோஷம், கார்த்திகை உள்பட மாதத்தில் ஆறு நாட்கள் 2000 ரூபாய் டிக்கெட் கொடுக்கப்படுகிறது. இன்னமும் அது நடைமுறையில் உள்ளது. முத்தரப்பு பேச்சுவார்த்தை நடத்தினால் மட்டுமே இந்த பிரச்னைக்கு நிரந்தர தீர்வு ஏற்படும். இல்லாவிட்டால் ஒருவருக்கொருவர் குற்றம்சாட்டி கொண்டே இருக்க வேண்டியது தான்.
நீதிமன்ற உத்தரவுக்குப் பிறகும் அதிகாரிகள் தற்போது வரை அவர்களுக்கு வேண்டியவர்களை விதிமீறி அழைத்துச்செல்கிறார்கள். இதில் முழுக்க முழுக்க பாதிக்கப்படுவது நாங்கள் மட்டும் தான். நாங்கள் ஐந்து தலைமுறையாக கோயிலில் இருக்கிறோம். ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்தில் அப்போதைய ஆட்சியர் லூசிங் டன் 1825இல் வெளியிட்ட கெஜட்டில், எங்கள் தொழில் லாபகரமான தொழில் என்று கூறியுள்ளார். எனவே நீதிமன்றத்தின் இந்த உத்தரவு மூலம் நாகரிக பட்டினிச்சாவு ஏற்படுத்த முயற்சி செய்கிறார்கள்’ என்று தெரிவித்தார்.
உத்தரவை வரவேற்கும் பக்தர்கள்: பக்தர்கள் சார்பில் திருச்செந்தூரை சேர்ந்த மணிமாறன் கூறுகையில், 'திருச்செந்தூர் கோயிலில் சாமியைப் பார்ப்பது என்பது மிகப்பெரிய சவாலான விஷயமாக உள்ளது. கோயில் முன்பு ஈக்களை போன்று அய்யர்கள் கூட்டம் அதிகரித்துக்காணப்படும். வசதி உள்ளவர்கள் அய்யர்களுக்கு அதிகப்பணம் கொடுத்து உள்ளே செல்கிறார்கள். ஆனால், ஏழை பக்தர்கள் மணிக்கணக்கில் வரிசையில் காத்திருக்கின்றனர். தற்போது நீதிமன்றத்தின் இந்த உத்தரவு வரவேற்கத்தக்கது. இதன்மூலம் இறைவன் முன் அனைவரும் சமம் என்பது நிரூபிக்கப்பட்டுள்ளது' என்று தெரிவித்தார்
நீதிமன்றத்தின் தீர்ப்பு நல்ல நோக்குடன் இருந்தாலும் நடைமுறைச் சிக்கல்களை புரிந்துகொண்டு, பிரச்னைகளை களைய அரசு முன்வர வேண்டும் என பக்தர்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.
இதையும் படிங்க: முருகனுக்கே விபூதியா? திருச்செந்தூர் கோயிலில் நடப்பது என்ன?