தூத்துக்குடி வ.உ.சி. துறைமுகத்திற்கு சொந்தமான 36 புள்ளி 81 ஹெக்டர் பரப்பளவு கொண்ட நிலத்தில், தனியார் அனல்மின் நிலையம் ஒன்று அமைக்க திட்டமிடப்பட்டது.
இதற்கு தடைவிதிக்க கோரி தூத்துக்குடியை சேர்ந்த பாலசிங்கம் என்பவர் உயர்நீதி மன்ற மதுரைக்கிளையில் பொதுநல மனு தாக்கல் செய்திருந்தார்.
அதில், தூத்துக்குடி துறைமுகத்திற்குள் தமிழக அரசிற்கு சொந்தமான அனல் மின் நிலையம் உள்ளது. இரு அனல் மின் நிலையங்களுக்கு இடையே 10 கிமீ இடைவெளி இருக்க வேண்டும். ஆனால் புதிதாக அமையவுள்ள தனியார் அனல் மின் நிலையம் 10 கிமீ தொலைவிற்குள் உள்ளது. இதனால் பொதுமக்களுக்கு அதிகளவில் பாதிப்பு ஏற்படும்.
மேலும் மூன்று லட்சம் மக்கள் தொகை உள்ள இடத்தில் இருந்து 25 கிமீ தொலைவிற்கு அப்பால் அனல் மின் நிலையம் அமைய வேண்டும் என விதி உள்ளது.
ஆனால் இந்த புதிய அனல்மின் நிலையம் குடியிருப்பு பகுதிகளுக்கு மிக அருகில் உள்ளது. இதனால் அந்த அனல்மின் நிலையம் அமைக்க அளித்த அனுமதி, உரிமம், ஒப்பந்தம் போன்றவற்றை ரத்து செய்ய உத்திரவிட வேண்டும்" என கோரிக்கை விடுத்திருந்தார்.
இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் கிருபாகரன், சுந்தர் அமர்வு, அனல் மின் நிலையம் அமைப்பது குறித்து மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க வேண்டும் என உத்தரவிட்டு வழக்கினை மார்ச் 25ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.