தூத்துக்குடி: தூத்துக்குடியில் செயல்பட்டு வந்த ஸ்டெர்லைட் ஆலை கடந்த 2018ஆம் ஆண்டு, மக்களின் தன்னெழுச்சிப் போராட்டத்தால் மூடப்பட்டது. இதனை தொடர்ந்து ஸ்டெர்லைட் ஆலையை திறக்க அந்நிறுவனம் சட்டப் போராட்டங்களை நடத்தி வருகிறது.
இந்நிலையில், கட்டிடப் பணி தொடர்பாக ஒரு கோடியே 98 லட்சம் ரூபாயை தராமல் ஸ்டெர்லைட் ஆலை நிர்வாகம் இழுத்தடித்து வருவதாக தனியார் கட்டிட நிறுவனத்தைச் சேர்ந்த மாதவன் என்பவர், நேற்று(ஏப்.17) தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புகார் அளித்தார்.
இது தொடர்பாக தனியார் கட்டிட நிறுவனத்தைச் சேர்ந்த மாதவன் கூறும்போது, "சென்னையில் உள்ள SHA கன்ஸ்ட்ரக்சன் எங்களது நிறுவனம். நாங்கள் தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையில் கட்டிடப் பணிக்காக நேரடி ஒப்பந்தத்தில் வேலை செய்தோம். 2015 முதல் 2017 வரை வேலை பார்த்தோம். இதற்காக ஆலை நிர்வாகம் எங்களுக்கு ஒரு கோடியே 98 லட்சம் ரூபாய் தர வேண்டும்.
ஸ்டெர்லைட் ஆலை மூடப்பட்டதால், பழைய அதிகாரிகள் அனைவரும் சென்றுவிட்டனர். புதிய அதிகாரிகள் எங்களுக்கு பணம் தரவில்லை. இது தொடர்பாக பல முறை மின்னஞ்சல்கள் அனுப்பியுள்ளோம். ஆனால், ஆலை அதிகாரிகளை சந்திக்க முடியவில்லை. இவர்கள் எங்களுக்கு பணம் கொடுக்காததால், எங்களுடன் பணிபுரிந்த பிற சப்ளையர்கள், கூலித் தொழிலாளர்களுக்கு பணம் கொடுக்க முடியவில்லை, அவர்கள் அனைவரும் பணம் கேட்டு தொந்தரவு செய்கிறார்கள். எங்கள் மீது வழக்கும் போட்டுள்ளார்கள்.
ஐந்து வருடங்களாக போராடியும் பணம் கிடைக்காததால், இப்போது மாவட்ட ஆட்சியர் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளோம். இந்த விவகாரத்தில் மாவட்ட நிர்வாகமும், காவல்துறையும் தலையிட்டு எங்களுக்கு சேர வேண்டிய ஒரு கோடி 98 லட்சம் ரூபாயை பெற்றுத் தர வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன்.
ஸ்டெர்லைட் ஆலையுடன் நாங்கள் பணிபுரிந்தது தொடர்பான ஒப்பந்த நகல், பில்கள், வங்கி பணப்பறிமாற்ற விவரங்கள் உள்ளிட்ட அனைத்து ஆவணங்களும் எங்களிடம் இருக்கின்றன. அதேபோல் பணம் கேட்கும்போது, ஆலை அதிகாரிகள் பதிலளித்த மின்னஞ்சல்களும் உள்ளன.
இது தொடர்பான நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்றால், எங்களது ஊழியர்களுடன் ஸ்டெர்லைட் ஆலை முன்பு தர்ணா போராட்டத்தில் ஈடுபடுவோம். ஆலை முன்பே தற்கொலை கூட செய்து கொள்வேன், அந்த அளவுக்கு மன உளைச்சலில் இருக்கிறேன், எங்களது நிறுவனம் அந்த அளவுக்கு பாதிக்கப்பட்டுள்ளது" என்றார்.