தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், "வானிலை மாற்றம் காரணமாக தூத்துக்குடியில் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. ஆகவே, தூத்துக்குடியில் அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தயார் நிலையில் உள்ளன. தூத்துக்குடி மாவட்டத்தில் 36 இடங்களில் மழை நீர் அதிகம் தேங்கக் கூடிய இடங்களில் அதிகாரிகள், தன்னார்வலர்கள் உதவியுடன் அங்கு நிவாரணம் அளிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இதில் 5 இடங்கள் மிகவும் தண்ணீர் அதிகம் தேங்கக்கூடிய இடங்கள், ஆகவே அங்கு அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு, தாழ்வான பகுதியில் உள்ள மக்களுக்குத் தேவையான குடிநீர், ஜெனரேட்டர், உணவு, பாய், தலையணை, கொடுக்கப்பட உள்ளது. மேலும், நெடுஞ்சாலைத்துறை மூலமாக, சாலைகளில் உள்ள பள்ளத்தை நிரப்பும் பணிகள் நடைபெற்று வருகின்றன.
தூத்துக்குடி மாவட்டத்தில், 200க்கும் மேற்பட்ட ஏரிகள், பொது பணித்துறை மூலமும், 400க்கும் மேற்பட்ட ஏரிகள் ஊரக வளர்ச்சி துறையின்கீழும் பராமரிப்பு செய்யப்பட்டு வருகிறது. மொத்தம் 600க்கும் மேற்பட்ட ஏரிகளை தூர்வாரி, ஏரிகள் நிரம்பும் பட்சத்தில், கரை உடையாமல் இருக்க மணல், கம்பு வைக்கப்பட்டு அந்த ஊரைச் சேர்ந்த 300க்கும் மேற்பட்ட தன்னார்வலர்களுக்கு பயிற்சி அளித்து உபகரணம் வழங்கப்பட்டு, தாழ்வான பகுதியில் உள்ள வயதானோர், குழந்தைகள், தாய்மார்கள் அங்கிருந்து மீட்கக் கூடிய அளவில் பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது. மீனவர்கள் கடலுக்குச் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டு ஆழ்கடல் மீனவர்களுக்கு எச்சரிக்கை அளிக்கப்பட்டுள்ளது” எனக் கூறினார்.
இதையும் படிங்க: தூத்துக்குடியில் கடும் பனி மூட்டம் - திருப்பிவிடப்பட்ட விமானம்